காசா போர் விவகாரம்- இஸ்ரேல் மந்திரி திடீர் ராஜினாமா
- ஆட்சிக்கு எந்த நெருக்கடியும் இல்லை என்றாலும் இந்த விவகாரம் இஸ்ரேலில் புயலை கிளப்பி இருக்கிறது.
- 4 பிணைக்கைதிகளை இஸ்ரேல் படையினர் பத்திரமாக மீட்டனர்.
காசா:
பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது இஸ்ரேல் படையினர் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த சண்டையில் பலியானவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்தை நெருங்குகிறது. இந்த போரை உடனே நிறுத்த வேண்டும் என சர்வதேச நாடுகள் கோரிக்கை விடுத்து வந்தாலும் இஸ்ரேல் அதனை கண்டு கொள்ளவில்லை.
ஹமாசை அழிக்கும் வரை போர் நீடிக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நுசிரத் அகதிகள் முகாமில் இஸ்ரேல் படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினார்கள். பொதுமக்கள் அதிகம் வசித்து வரும் இப்பகுதியில் சுரங்க பாதையில் இஸ்ரேல் பிணைக்கைதிகளை அடைத்து வைத்துள்ளதாக கூறி இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. சரமாரியாக குண்டுகள் வீசியதிலும், துப்பாக்கியால் சுட்டத்திலும் 274 பேர் பரிதாபமாக இறந்தனர்.
இதில் 64 குழந்தைகள், 57 பெண்கள், 37 முதியவர்களும் அடங்குவர். இந்த தாக்குதலின் போது 4 பிணைக்கைதிகளை இஸ்ரேல் படையினர் பத்திரமாக மீட்டனர்.
தொடர்ந்து நீடித்து வரும் இந்த போரால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கும், இஸ்ரேல் போர் அமைச்சரவையில் பாதுகாப்புத்துறை மந்திரியாக இருந்து வரும் பென்னி காண்ட்சுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த சூழ்நிலையில் பென்னி காண்ட்ஸ் தனது மந்திரி பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும் போது காசாவில் ஹமாசுக்கு எதிரான போரில் உண்மையான வெற்றியை நோக்கி முன்னேறுவதை பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தடுக்கிறார். அதனால் நான் இன்று கனத்த இதயத்துடன் எனது பதவியை ராஜினாமா செய்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்,
இஸ்ரேல் மந்திரி பென்னி காண்ட்ஸ் ராஜினாமா செய்வதற்கு முன்பு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அவரை பதவியை விட்டு விலக வேண்டாம். போரை கைவிடுவதற்கான நேரம் இதுவல்ல. படைகள் சேர வேண்டிய நேரம் இது என்று கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மந்திரி பதவி விலகிய விவகாரம் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது .
இதனால் ஆட்சிக்கு எந்த நெருக்கடியும் இல்லை என்றாலும் இந்த விவகாரம் இஸ்ரேலில் புயலை கிளப்பி இருக்கிறது.