மகள்களுக்கு பாலியல் சித்ரவதை: 702 வருடம் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி!
- பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் சகஜம்
- குற்றவாளியின் கொடூர செயலால் அவரது ஒரு மகள் கர்ப்பமடைந்தார்
தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில் கிரிமினல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகிறது. அதிலும் பாலியல் குற்றங்களுக்கு பிரம்படியுடன் கூடிய பல வருட சிறை தண்டனை அங்கு வழக்கமான ஒன்று.
மலேசியாவின் ஜொஹோர் மாவட்டத்தில் உள்ளது முவார்.
இங்குள்ள 53 வயதான சுகாதார பணியாளர் ஒருவருக்கு 12 மற்றும் 15 வயது நிரம்பிய இரு மகள்கள் இருக்கின்றனர். இவர் 2018-ம் ஆண்டிலிருந்து இந்த ஆண்டு ஜூலை வரை, தனது சொந்த மகள்களை முவார் பகுதியிலுள்ள பக்ரி மற்றும் ஜலன் ஜெரம் டெபி எனும் இரு பகுதியிலுள்ள வீடுகளில் கொண்டு சென்று பாலியல் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இவரது இந்த கொடூர செயலால் 2 மகள்களில் ஒரு மகள் கர்ப்பமடைந்திருக்கிறார். இதனையடுத்து இந்த பணியாளர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் முன் ஆஜர் செய்யப்பட்டு குற்றம் உறுதி செய்யப்பட்டது.
காவல்துறை சார்பாக ஆஜரான துணை அரசு வழக்கறிஞர் இவருக்கு மிக கடுமையான தண்டனை வழங்குமாறு கோரிக்கை வைத்தார். ஆனால் குற்றவாளியான அவரது தந்தை, தனக்கென வக்கீல் வைத்து கொள்ளாமல், குற்றத்தை ஒப்பு கொண்டு, தான் மனம் வருந்துவதாகவும் அதனால் தனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறும் நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதி அபு பக்கர் மனத், குற்றவாளி தனது கொடுமையான குற்றத்திற்காக உண்மையிலேயே வருந்தும் வகையில் அவருக்கு 702 வருட சிறைத்தண்டனையும், இத்துடன் 234 பிரம்படியும் கொடுக்கப்பட வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.
சமீபத்தில் இதே போல், தனது 15 வயது மகள் மீது பாலியல் தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக ஜொஹோரில் ஒருவருக்கு 218 வருட சிறைத்தண்டனையும், 75 பிரம்படியும் தண்டனையாக வழங்கப்பட்டது.
மலேசியாவில் பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவது போல் இந்தியாவிலும் கொண்டு வரப்பட வேண்டும் என சமூக வலைதளங்களில் பயனர்கள் தெரிவிக்கின்றனர்.