சீன உளவுக்கப்பல் மீண்டும் மாலத்தீவு வந்தது
- கப்பலில் கடல் பரப்பை கண்காணிக்கும் திறன் கொண்ட அனைத்து வசதிகளும் உள்ளன.
- இந்திய பெருங்கடல் பகுதியில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நமது அண்டை நாடான மாலத்தீவில் புதிய அதிபராக முகமது முய்சு பதவி ஏற்றதில் இருந்து இந்தியாவுடனான மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. சீனாவுக்கு ஆதரவானவர் என்று கருதப்படும் முகமது முய்சு இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
இந்தியாவின் எதிர்ப்பை மீறி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சீன உளவு கப்பலை மாலத்தீவு கடற்பகுதியில் நிறுத்த அனுமதி வழங்கியது. சுமார் 6 நாட்கள் முகாமிட்டு இருந்த அந்த கப்பல் பின்னர் திரும்பி சென்றது.
இந்த நிலையில் 4,500 டன் எடையுள்ள சியாங்- யாங்-ஹாங்-3 என்ற சீன உளவு கப்பல் மீண்டும் மாலத்தீவு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கப்பல் மாலத்தீவின் மாலேவுக்கு மேற்கு சுமார் 7.5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திலாபுஷி என்ற துறைமுகத்தில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது.
லட்சத்தீவில் உள்ள மினிசாங் தீவில் இருந்து 70 கடல் மைல் தொலைவில் இந்த துறைமுகம் அமைந்து உள்ளது. இங்கிருந்தபடி மிக எளிதாக இந்தியாவை வேவு பார்க்க முடியும்.
இது சாதாரண ஆய்வு கப்பல் என சீனா கூறினாலும் அதிநவீன தொழில் நுட்ப வசதியுடன் கூடிய உளவு கப்பல் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கப்பலில் கடல் பரப்பை கண்காணிக்கும் திறன் கொண்ட அனைத்து வசதிகளும் உள்ளன. இந்த கப்பல் மாலத்தீவு கடற் பகுதியில் எந்தவித ஆராய்ச்சி பணியிலும் ஈடுபடாது என அந்நாட்டு வெளியுறவு துறை தெரிவித்துள்ளது.
ஆனால் எதற்காக இந்த உளவு கப்பல் மாலத்தீவு வந்துள்ளது, எத்தனை நாட்கள் இக்கப்பல் மாலத்தீவில் நிறுத்தி வைக்கப்படும் என்பது தொடர்பாக எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. மாலத்தீவின் இந்த நடவடிக்கை அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதால் இந்திய கடற்படை உஷார் படுத்தப்பட்டுள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.