உலகம்
null

மதுபோதையில் சண்டை.. புதைக்கப்பட்ட முதியவர் அண்டர்டேக்கர் பானியில் 4 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு

Published On 2024-05-17 16:28 GMT   |   Update On 2024-05-17 16:36 GMT
  • ஆதாரங்களை சேகரிக்க போலீசார் வீட்டை சுற்றி தேடுதல் வேட்டை நடத்தினர்.
  • முதியவர் உயிருடன் புதைக்கப்பட்டு இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நாடு மால்டோவா. இந்நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள சிறிய கிராமம் தான் உஸ்தியா. இந்த கிராமத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்ததாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், படுகாயங்களுடன் உயிரிழந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பிறகு, மூதாட்டி உயிரிழப்பு தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த 18 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட போது, அந்த இளைஞர் மதுபோதையில் மயக்க நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இளைஞர் கைதை தொடர்ந்து ஆதாரங்களை சேகரிக்க போலீசார் வீட்டை சுற்றி தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது வீட்டின் பின்புறம் யாரோ உதவி கேட்கும் குரல் போலீசாருக்கு கேட்டது. எங்கிருந்து குரல் வருகிறது என போலீசார் தேடினர். சிறிது நேரத்தில் உதவி கேட்கும் குரல் மண்ணுக்குள் இருந்து வந்ததை போலீசார் உறுதிப்படுத்தினர். அதன்பின், சம்பவ இடத்தை குழி தோண்டும் பணியில் போலீசார் இறங்கினர். அப்போது 62 வயது முதியவர் உயிருடன் புதைக்கப்பட்டு இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

உயிருடன் புதைக்கப்பட்ட முதியவரை மீட்ட போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மீட்கப்பட்ட முதியவரும், போலீசார் சற்று முன் கைது செய்த 18 வயது இளைஞரும் கடந்த நான்கு நாட்களுக்கு முன் ஒன்றாக இணைந்து மது அருந்தியுள்ளனர். மது அருந்தும் போது இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

உடனே முதியவரை கடுமையாக தாக்கிய இளைஞர் அவரை கழுத்தில் கத்தியால் வெட்டியுள்ளார். அப்போது மயக்கமடைந்த முதியவரை, அந்த இளைஞர் வீட்டின் பின்புறம் உள்ள கீழ்தளத்தில் மறைத்துவைத்துள்ளார். அதன்பிறகு இளைஞர் வீட்டின் பின்புறம் குழி தோண்டி, முதியவரை அதில் தள்ளி புதைத்துள்ளார். மது போதையில் முதியவர் உயிருடன் புதைக்கப்பட்டு, நான்கு நாட்கள் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News