எவரெஸ்ட் சிகர மலையேறும் வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடு
- மவுன்ட் எவரெஸ்ட் மலைச்சிகரத்தின் வடக்கில் திபெத்தும், தெற்கில் நேபாளமும் உள்ளன
- 1953ல் இருந்து சுமார் 300 பேர் மலையேறும் முயற்சியில் உயிரிழந்துள்ளனர்
இமயமலைத் தொடரில் சீனா மற்றும் நேபாளம் ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் உள்ள உலகின் உயரமான மலைச்சிகரம், மவுன்ட் எவரெஸ்ட் (Mount Everest).
இதன் உயரம் 8,849 மீட்டர் (29,032 அடி).
மவுன்ட் எவரெஸ்ட் மலைச்சிகரத்தின் வடக்கில் திபெத்தும், தெற்கில் நேபாளமும் உள்ளன.
எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொடும் சாதனைக்காக பலரும் தங்களை தயார்படுத்தி கொண்டு உயிரை பணயம் வைத்து கடினமான இந்த மலையேற்றத்தில் ஈடுபடுவது வழக்கம்.
1953ல் இருந்து சுமார் 300 பேர் இந்த முயற்சியில் உயிரிழந்துள்ளனர்.
எவரெஸ்ட் பேஸ் கேம்ப் (Everest base camp) எனப்படும் மலையடிவார தளம் 18,000 அடி உயரத்தில் உள்ளது. அங்கிருந்து மலையுச்சியை அடையும் முயற்சியில் பனிமழை, பனிப்புயல், பனிச்சரிவு உள்ளிட்ட காரணங்களால், காணாமல் போனவர்களை கண்டு பிடிப்பது மிக கடினமான செயலாக இருந்து வருகிறது.
இந்நிலையில், இச்சிக்கலை தவிர்க்கும் முயற்சியாக நேபாள அரசு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
இது குறித்து பேசிய நேபாள சுற்றுலா துறை தலைமை அதிகாரி ராகேஷ் குருங், "எவரெஸ்ட் மலையேறும் முயற்சியில் ஈடுபடும் அனைத்து வீரர்களுக்கும் அவர்களின் உடையில் அணிந்து கொள்ளும் வகையில் ஒரு மின்னணு "சிப்" அரசாங்கத்தால் வழங்கப்படும். இதன் மூலம் மலையுச்சியை அடையும் முயற்சி பாதுகாப்பானதாக இருக்கும். மேலும், அவசர காலகட்டங்களில் தேடுதல் பணிகளை எளிதாக்கவும் முடியும்" என தெரிவித்தார்.
2023ல் ஒரு இந்தியர், ஒரு சீனர், 4 நேபாளிகள் உட்பட 12 மலையேறும் வீரர்கள் உயிரிழந்ததாக நேபாள சுற்றுலாத்துறை அறிவித்தது.