உலகம்
null

மொரோக்கோவில் சக்கி வாய்ந்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 630-ஐ தாண்டியது

Published On 2023-09-09 02:40 GMT   |   Update On 2023-09-09 07:38 GMT
  • ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவு
  • 296 பேர் பலி உள்துறை அமைச்சகம் தகவல்

வடஆப்பிரிக்க நாடான மொரோக்கோ, அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் மத்திய தரைக்கடலின் எல்லையில் அமைந்துள்ளது. இங்கு நேற்று இரவு அந்நாட்டின் நேரப்படி 11.11 மணிக்கு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் அந்நாட்டின் தெற்கில் உள்ள மராகேஷ் நகரை மையமாக கொண்டு நில நடுக்கம் உண்டானது. நகரில் இருந்து தென்மேற்கே 71 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஹைஅட்லஸ் மலைகளில் 18.5 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவில் 6.8 புள்ளிகளாக பதிவானது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

மொரோக்கோவின் தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் கூறும்போது, நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7 ஆக பதிவானது என்று தெரிவித்தது.

சில வினாடிகள் நீடித்த சக்திவாய்ந்த நில நடுக்கத்தால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கி இடிந்து விழுந்தன. இரவு நேரம் என்பதால் மக்கள் தூங்கி கொண்டிருந்த நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பலரால் வீடுகளை விட்டு உடனடியாக வெளியேற முடியவில்லை.

இதனால் கட்டிட இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கிக் கொண்டனர். அதே நேரத்தில் வீடுகளை விட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். அதன்பின் 19 நிமிடங்களுக்கு பிறகு 4.9 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளுக்கு மீட்புக் குழுவினர், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதில் பொதுமக்களும் ஈடுபட்டனர். கட்டிட இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியவர்களை மீட்டபோது பலர் பலியாகி இருப்பது தெரிய வந்தது.

முதலில் 5 பேர் உயிரிழந்தாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் நேரம் செல்ல செல்ல பலி எண்ணிக்கை அதிகரித்தது. இடிபாடுகளில் இருந்து பலரது உடல்கள் மீட்கப் பட்டன.

இந்த சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் 296 பேர் பலியாகி உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சுமார் 150-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர். பின்னர் பலி எண்ணிக்கை 630-ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. கட்டிட இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கியுள்ளதாக தெரிகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. நில நடுக்கத்தால் வரலாற்று சுற்றுலா நகரமான மராகேஷ் மற்றும் மலை கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக பீதியடைந்த மக்கள், வீடுகளுக்குள் செல்லாமல் இரவு முழுவதும் தெருக்களிலேயே தஞ்சம் அடைந்து தவித்தனர். உறவினர்களை இழந்தவர்கள் அழுதபடி இருந்தனர்.

நில நடுக்கம் ஏற்பட்ட பிறகு சுமார் 10 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டானது. இதனால் இருள் சூழ்ந்த நிலையில், கட்டிடங்கள் இடிந்த போது பலர் வெளியேற முடியாமல் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். அதேபோல் தொலைபேசிகளும் இயங்கவில்லை.

இதனால் 10 நிமிடங்களுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் மக்கள் கடும் பீதியடைந்திருந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, இரவு தூங்கி கொண்டிருந்தபோது, கடுமையான நிலநடுக்கத்தை உணர்ந்தோம். கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்குவதை பார்த்தோம்.

உடனே வீடுகளை விட்டு வெளியேறினோம். சாலைகளில் நிறைய பேர் இருந்தனர். மக்கள் அனைவரும் அதிர்ச்சியிலும், பீதியிலும் இருந்தனர். குழந்தைகள் அழுதபடியே இருந்தனர்.

இரவு நேரம் என்பதால் தூக்கத்தில் இருந்த பலர் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். 10 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. போன்களும் இயங்கவில்லை. மீண்டும் மின்சாரம் வந்த போதும், மக்கள் அனைவரும் சாலைகளிலேயே இருக்க முடிவு செய்தோம் என்றனர்.

நிலநடுக்கம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. அதில், கட்டிடங்கள் குலுங்குவது, இடிந்த கட்டிடங்கள், மக்கள் ஓடி வருவது சிலர் கட்டிட தூசிகள் இடையே நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன.

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான மராகேச்சில் பல இடங்களிலும் புகழ்பெற்ற சிவப்பு சுவர்களின் பகுதிகள் சேதமடைந்துள்ளன.

இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம், 350 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தலைநகர் ரபாத், காசா பிளாங்கா, எஸ்செவுயிரா ஆகிய இடங்களிலும் நில நடுக்கம் உணரப்பட்டது. அங்கும் மக்கள் பீதியில் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

அதேபோல் அண்டை நாடுகளான அல்ஜீரியா, போர்ச்சுக்கல்லிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொரோக்கோவில் கடந்த 1960-ம் ஆண்டு அகாடிர் நகருக்கு அருகே ஏற்பட்ட நில நடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News