பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தை: மொசாட் தலைவரின் கத்தார் பயணம் ரத்து
- ஒன்றரை மாத போருக்குப்பின் 4 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.
- பின்னர் மேலும் இரண்டு நாள் அதன்பின் ஒருநாள் என மொத்தம் ஏழு நாட்கள் போர் நிறுத்தம் ஏற்பட்டது.
ஹமாஸ்- இஸ்ரேல் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட உலக நாடுகள் விரும்புகின்றன. அமெரிக்காவும் கட்டாயம் போர் நிறுத்தம் தேவை என்கிறது. அதோடு கத்தாருடன் இணைந்து பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இதன் பயனாகத்தான் ஏழு நாள் போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்திருந்திருந்த சுமார் 90 பிணைக்கைதிகளை விடுவித்தனர். அதேவேளையில் இஸ்ரேல் சிறையில் இருந்து 270 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியதுடன், மீண்டும் காசா மீது தாக்குதல் தொடங்கியது.
தற்போது ஹமாஸ் பிடியில் 135 பிணைக்கைதிகள் இருப்பதாகவும், இவர்களில் 115 பேர் உயிருடன் இருக்கலாம் எனவும் இஸ்ரேல் பிரதம மந்திரி அலுவலகம் நம்புகிறது.
இதற்கு முன்னதாக கத்தாரின் தோகாவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதே இடத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது. இதில் இஸ்ரேல் சார்பில் மொசாட் தலைவர் டேவிட் பார்னியா கலந்து கொள்ள இருந்தார்.
இந்த நிலையில் இஸ்ரேல் அவரது பயணத்தை ரத்து செய்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தலைமையலான இஸ்ரேல் போர் கேபினட், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இஸ்ரேல் நாட்டின் உயர் அதிகாரி செல்லக்கூடாது என முடிவு எடுத்து, டேவிட் பார்னியாவின் பயணத்தை ரத்து செய்துள்ளது.