உலகம்

உச்சநீதிமன்ற தீர்ப்பின் எதிரொலி: எதிர் துருவங்களான முன்னாள் அமெரிக்க அதிபர்கள்

Published On 2023-06-30 06:57 GMT   |   Update On 2023-06-30 06:57 GMT
  • இந்த தீர்ப்பை அடுத்து எங்கள் முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டிய தருணம் இது- ஒபாமா
  • இதன்மூலம் இனி அமெரிக்கர்கள் பிற நாட்டினருடன் போட்டியிட முடியும்- டிரம்ப்

அமெரிக்காவில் ஒரு உச்சநீதிமன்ற தீர்ப்பு, இரண்டு முன்னாள் அமெரிக்க அதிபர்களை எதிரெதிர் நிலைப்பாட்டை எடுக்க வைத்துள்ளது.

கருப்பின மற்றும் லத்தீன் இனத்தின மாணவ- மாணவிகளின் கல்லூரி சேர்க்கையை அதிகப்படுத்தும் விதமாக உறுதியான நடவடிக்கை கொள்கைகள் (affirmative action efforts) என்ற பெயரில் மாணவர் சேர்க்கையின்போது அவர்கள் இனத்தை அறிந்து கொள்ள வழி செய்யும் வகையில் விண்ணப்பபடிவங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அந்நாட்டு உச்சநீதிமன்றம் இனி மாணவ- மாணவியருக்கான விண்ணப்ப படிவத்தில் அனுமதி முறைகளுக்காக அவர்களின் இனம் என்ன என்பதை தெரிந்து கொள்ள கேள்விகள் கேட்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

இந்த தீர்ப்புக்கு முன்னாள் அதிபர்களான பராக் ஒபாமாவும், டொனால்ட் டிரம்பும் எதிரெதிர் நிலைகளை எடுத்துள்ளனர்.

இந்த தீர்ப்புக்கு மாறான கருத்துடன் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கூறியிருப்பதாவது:-

கடைபிடிக்கப்பட்டு வந்த வழிமுறை நாங்களும் இந்த மண்ணை சார்ந்தவர்கள் என்பதை நிரூபிக்க எனது மனைவி மிச்செல் உட்பட பல தலைமுறை மாணவர்களை அனுமதித்தது. அனைத்து மாணவர்களுக்கும் இனம் பாராமல் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பைப் பெற இதுபோன்ற கொள்கைகள் அவசியம்.

அமெரிக்காவின் பெரும்பாலான முக்கிய நிறுவனங்களில் இருந்து திட்டமிட்டு விலக்கப்பட்டவர்களுக்கு, நாங்களும் தகுதியுடையவர்கள் என்பதை காட்டுவதற்கான வாய்ப்பை அளித்து வந்தது. இந்த தீர்ப்பை அடுத்து எங்கள் முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டிய தருணம் இது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆனால், இந்த தீர்ப்பை வரவேற்று முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது "ட்ரூத்" (Truth) சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது:-

இதன் மூலம் இனி அமெரிக்கர்கள் பிற நாட்டினருடன் போட்டியிட முடியும். எல்லோரும் எதிர்பார்த்திருந்த ஒரு நல்ல தீர்ப்பு இது. நம்முடைய மிகப்பெரிய மனங்கள் போற்றப்பட வேண்டும். அதைத்தான் இந்த அற்புதமான நாள் கொண்டு வந்திருக்கிறது. அனைத்தும் இனி தகுதியின் அடிப்படைலேயே நிர்ணயம் செய்யப்படும் என்கின்ற நிலைக்கு நாம் திரும்புகிறோம். இது இப்படித்தான் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இந்த தீர்ப்பு குறித்து கடுமையான எதிர்ப்பினை பதிவிட்டிருக்கும் தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "பல தசாப்தகால முன்னுதாரணங்களிலிருந்து விலகிச் செல்கிறது" என்று கூறியிருக்கிறார்.

Tags:    

Similar News