உலகம்

காலக்கெடு நிர்ணயிக்க மறுக்கும் நேட்டோ நாடுகள்: விரக்தியான உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

Published On 2023-07-12 06:59 GMT   |   Update On 2023-07-12 06:59 GMT
  • எதிர்காலத்தில்தான் இணைய முடியும் என நேட்டோ நாடுகள் அறிவிப்பு
  • காலவரையறை கூறப்படாதது அபத்தமான செயல் என்கிறார் ஜெலன்ஸ்கி

நேட்டோ எனப்படும் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் உள்ள 31 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் நேற்று லிதுவேனியா நாட்டின் தலைநகர் வில்னியஸ் நகரில் இரண்டு நாள் உச்சி மாநாட்டிற்காக கூடியுள்ளனர். இந்த மாநாட்டில் உக்ரைன் நாட்டை நேட்டோவில் இணைத்து கொள்ள முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உட்பட பல நாட்டினர் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால், நேட்டோ தலைவர்கள் உக்ரைன் எதிர்காலத்தில்தான் இந்த கூட்டணியில் சேர முடியும் என்று கூறியதோடு நிறுத்தி விட்டனர். அதனை அமைப்பில் சேர எந்த முறையான அழைப்பையும் வழங்கவில்லை.

உக்ரைனின் எதிர்காலம் நேட்டோவில் உள்ளது என்று பிரகடனத்தில் தெரிவித்த தலைவர்கள், அதற்கான செயல்முறைக்கு எந்த காலக்கெடுவையும் வழங்கவில்லை.

நேட்டோவின் பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், "கூட்டணியில் உள்ள உறுப்பினர்கள் ஒப்புக்கொண்டு நிபந்தனைகள் நிறைவேற்றப்படும்போது கூட்டணியில் சேர உக்ரைனுக்கு அழைப்பு விடுப்போம்" என்று மட்டுமே கூறியிருக்கிறார்.

இந்த பின்னடைவு ஜெலன்ஸ்கியை கோபப்படுத்தியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து டுவீட் செய்திருக்கும் அவர், "நேட்டோ உக்ரைனை சேர்க்க தயாராக இல்லை. இணைவதற்கு எந்த காலவரையறையும் கூறப்படவில்லை. இது அபத்தமான செயல்" என்று தெரிவித்திருக்கிறார்.

ரஷியாவுடன் போரில் ஈடுபடும்போது நேட்டோவில் சேர முடியாது என்பதை ஜெலன்ஸ்கி ஏற்று கொள்கிறார். ஆனால், போர் முடிந்தவுடன் கூடிய விரைவில் அதில் சேர விரும்புகிறார்.

காலக்கெடு எதுவும் வரையறுக்காததால், ரஷியாவுடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் நேட்டோ ஈடுபடும்போது உக்ரைனை உறுப்பினராக்குவதா? வேண்டாமா? என தங்கள் நிலை ஒரு பேரம் பேசும் பொருளாக மாறிவிடும் சந்தர்ப்பம் உள்ளது. இது எங்களுக்கு ஒரு பலவீனம் ஆகி விடலாம்" என்று அதிபர் செலன்ஸ்கி கூறியிருக்கிறார்.

கடந்த காலத்தில், மேற்கத்திய பாதுகாப்பு உறுதிமொழிகள், 2 ரஷிய படையெடுப்புகளைத் தடுக்கத் தவறிவிட்டன என்பதாலும், உக்ரைன் நேட்டோவின் ஒரு அங்கமானால் ரஷியாவிற்கு போரை நீடிக்க ஒரு ஊக்கத்தை அளிக்கலாம் என்பதாலும் சில உறுப்பு நாடுகள் உக்ரைனை சேர்த்துக்கொள்ள அஞ்சுகிறது.

Tags:    

Similar News