உலகம்

சிறுமியிடம் அத்துமீறிய போலீஸ்- அதிரடி நடவடிக்கை எடுத்த அமெரிக்க காவல்துறை

Published On 2023-09-03 08:46 GMT   |   Update On 2023-09-03 08:46 GMT
  • நேஷனல் நைட் அவுட் நிகழ்ச்சியில் மக்களும், காவல் அதிகாரிகளும் பங்கேற்பார்கள்
  • ஆதாரங்களை தடுக்கும் வகையில் காரிலிருந்த கண்காணிப்பு கேமிராக்களை உடைத்தார்

அமெரிக்காவில் சட்டம் மற்றும் ஒழுங்கை காக்கும் பொறுப்பில் உள்ள காவல்துறைக்கும், மக்களுக்குமிடையே ஒரு ஆரோக்கியமான உறவுநிலை நிகழ, "நேஷனல் நைட் அவுட்" (National Night Out) எனப்படும் சமுதாய கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இதில் காவல்துறையை சேர்ந்தவர்களும், மக்களும் இணைந்து பங்கு பெறுவார்கள்.

ஆகஸ்ட் ௧ம் தேதி அன்று, அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தின் மனலாபன் குடியிருப்பு பகுதியில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

இப்பகுதி காவல்துறையை சேர்ந்தவர் 46 வயதான கெவின் ரூடிட்ஸ்கி (Kevin Ruditsky).

கெவின் அந்நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் ஒரு 16-வயது சிறுமியை சந்தித்தார். அச்சிறுமியின் மீது ஆசையை வளர்த்து கொண்ட கெவின், அச்சிறுமியின் வசிப்பிடத்தையும், தொலைபேசி எண்ணையும் கண்டுபிடித்தார். அச்சிறுமியின் தொலைபேசி எண்ணிற்கு ஆபாச புகைப்படங்களை அனுப்ப ஆரம்பித்தார்.

பிறகு ஒரு நாள் அச்சிறுமியின் வீட்டின் வாசலிலேயே காத்திருந்து அச்சிறுமி வெளியில் வந்ததும் அவரை தனது காவல்துறை காரிலேயே மெதுவாக பின் தொடர்ந்தார். அவர் அருகே சென்று அந்த சிறுமியை தனது காரில் ஏற்றி, அவள் கைகளில் விலங்கிட்டார். செயலற்று இருந்த அந்த சிறுமியை முத்தமிட முயன்றார்.

இக்காட்சிகள் தனது காரில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகி விடுவதை தடுக்கும் நோக்கத்தில், அந்த கேமிராக்களை உடைத்தார்.

அவரிடமிருந்து எப்படியோ தப்பிய சிறுமி, தனக்கு வேண்டியவர்களிடம் இதை தெரிவித்ததின் பேரில் காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டு, விசாரணை நடந்தது. விசாரணையில், கெவின் செய்த குற்றம் ஊர்ஜிதமானதும் அவர் மீது தகுந்த பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

பணியிலிருந்தும் கெவின் ஊதியமின்றி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

"மக்களின் நம்பிக்கையை பெற ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு காவல்துறை அதிகாரியே இவ்வாறு கீழ்த்தரமாக நடந்து கொண்டது எந்த விதத்திலும் சகித்து கொள்ள முடியாத செயல்" என இது குறித்து காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News