உலகம்
நைஜீரியாவில் ராணுவ ட்ரோன் தவறுதலாக தாக்கியதில் கிராம மக்கள் 30 பேர் பலி
- ஆயுத கும்பலை குறிவைத்து ராணுவம் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.
- பண்டிகை ஒன்றுக்காக கிராம மக்கள் ஏராளமானோர் கூடிய இடத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது.
நைஜீரிய நாட்டின் வடமேற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் ஆயுத கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. அவர்களுக்கு எதிராக ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் நைஜீரியாவின் வடமேற்கில் உள்ள கடுனா மாகாணம் டுடுன்பிரி கிராமத்தில் ராணுவ டிரோன் ஒன்று தாக்குதல் நடத்தியது.
அந்த கிராமத்தில் பண்டிகை ஒன்றுக்காக கிராம மக்கள் ஏராளமானோர் ஒரு இடத்தில் கூடி இருந்தனர். அப்போது ராணுவ டிரோன் தவறுதலாக கிராம மக்கள் மீது தாக்குதல் நடத்தியது.
இதில் ஏராளமானோர் காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். இந்த தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.
ஆனால் கிராம மக்கள் கூறும்போது, 30 பேர் பலியானதாகவும், 60 பேர் காயம் அடைந்ததாகவும் தெரிவித்தனர். மற்றொரு தகவலில் 85 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.