உலகம்

கருப்பின வாக்காளர்கள் குறித்த டிரம்ப் பேச்சிற்கு ஹாலே கண்டனம்

Published On 2024-02-25 07:17 GMT   |   Update On 2024-02-25 07:17 GMT
  • டிரம்பிற்கு வாய்ப்பு அதிகம் இருந்தும் நிக்கி ஹாலே போட்டியில் பின்வாங்கவில்லை
  • இது போன்ற பேச்சுக்கள் கட்சியின் வெற்றி வாய்ப்பை தகர்த்து விடும் என்றார் நிக்கி ஹாலே

2024 வருட இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் ஆகியோர் களமிறங்கி உள்ளனர்.

குடியரசு கட்சி சார்பில் தெற்கு கரோலினாவின் முன்னாள் கவர்னர் நிக்கி ஹாலே, டிரம்பிற்கு போட்டியாக, தனக்கு ஆதரவு கோரி பிரசாரம் செய்து வருகிறார்.

தற்போது நிலவும் சூழலில் அமெரிக்காவில் குடியரசு கட்சியினரின் ஆதரவு டொனால்ட் டிரம்பிற்கே அதிகமாக உள்ளது. ஆனால், நிக்கி ஹாலே போட்டியில் இருந்து பின்வாங்கவில்லை.

இந்நிலையில், தெற்கு கரோலினாவில் தனது கட்சியினரிடம் ஆதரவு கோரி பிரசாரம் செய்யும் போது கருப்பின மக்கள் குறித்து டொனால்ட் டிரம்ப் சில கருத்துகளை தெரிவித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:

கருப்பின மக்களுக்கு என்னை பிடிக்கும். என்னை போலவே அவர்களும் வஞ்சிக்கப்பட்டனர்.

நான் பாதிக்கப்பட்டது போல அவர்களும் பாதிக்கப்பட்டதால் அவர்கள் என்னை தங்களில் ஒருவனாக பார்க்கின்றனர்.

என்னை காவலில் எடுத்து போது வெளியிடப்பட்ட எனது "மக் ஷாட்" (mug shot) புகைப்படம் அவர்களை மிகவும் கவர்ந்துள்ளது. ஏனெனில், பிறரை காட்டிலும் கருப்பின மக்கள் அதிகமாக அது போல் காவல்துறையினரால் புகைப்படம் எடுக்கப்பட்டவர்கள்.

இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார்.

ஆனால், டிரம்பின் இந்த கருத்தை நிக்கி ஹாலே விமர்சித்துள்ளார்.

இது குறித்து நிக்கி ஹாலே தெரிவித்ததாவது:

கருப்பின மக்களை இவ்வாறு அருவெறுக்கத்தக்க வகையில் பேசியதை கண்டிக்கிறேன்.

டிரம்பை மனம் போன போக்கில் பேச விட்டால் இதுதான் நடக்கும்.

பொதுத் தேர்தல் முடியும் வரை அவரிடமிருந்து இது போன்ற பேச்சுக்களும், குழப்பங்களும் அதிகம் வரும். இது போன்ற பேச்சுக்கள் குடியரசு கட்சியின் வெற்றி வாய்ப்பை தகர்த்து விடும்.

அதனால்தான் டிரம்பால் ஒரு பொதுத்தேர்தலை கூட வெல்ல முடியாது என கூறி வருகிறேன்.

இவ்வாறு ஹாலே கூறினார்.

நிக்கி ஹாலேவை போல், "தன் மேல் உள்ள வழக்குகளால் கருப்பின மக்கள் அவரை விரும்புவார்கள் என டிரம்ப் கூறுவது அவர்களை அவமானப்படுத்துவது போல் உள்ளது" என ஜனநாயக கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர்.

Tags:    

Similar News