இஸ்ரேல் கட்டுப்பாட்டில் காசா: குடிநீர், உணவு, மின்சார வினியோகம் துண்டிப்பு
- 700க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் ஹமாஸ் அமைப்பின் தாக்குதலில் உயிரிழந்தனர்
- மிருகங்களோடு சண்டையிடுகிறோம்; அதற்கு ஏற்ற வழிமுறைகளில் போரிடுகிறோம்
தெற்கு இஸ்ரேல் பகுதியில் கடந்த சனிக்கிழமை காலை பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு திடீர் தாக்குதல் நடத்தியது.
வான்வழியாக 5000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவியும், தரை வழியாகவும், நீர் வழியாகவும் திட்டமிட்டு ஹமாஸ் அமைப்பினர் நடத்திய இத்தாக்குதலில் இஸ்ரேலில் பொதுமக்கள் பலரை உள்ளடக்கிய 700க்கும் மேற்பட்டவர்கள் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.
இத்தாக்குதல் நடவடிக்கையை சற்றும் எதிர்பாராத இஸ்ரேல், பதிலடியாக ஹமாஸ் அமைப்பின் மீது போர் தொடுத்திருக்கிறது. ஹமாஸ் ராணுவத்தை முற்றிலும் அழிக்க போவதாக தன் நாட்டு மக்களுக்கு உறுதியளித்துள்ள இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் முக்கிய பகுதிகளில் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.
காசா முனை (Gaza Strip) எனப்படும் முக்கிய பிரதேசத்தை முழுவதுமாக தங்கள் கட்டுப்பாட்டில் இஸ்ரேல் கொண்டு வந்து விட்டது.
"அப்பகுதியில் அனைத்தும் எங்கள் கட்டுப்பாட்டிற்கு வந்து விட்டது. அனைத்தும் மூடப்பட்டு விட்டது. மின்சாரம், உணவு, குடிநீர், எரிபொருள் உள்ளிட்ட எதுவும் அங்கு கிடைக்காமல் செய்து விட்டோம். நாங்கள் மனிதர்களோடு போரிடவில்லை; மிருகங்களோடு போரிடுகிறோம். அதற்கு ஏற்றவாறு நாங்கள் செயல்படுகிறோம்," என இது குறித்து இஸ்ரேல் ராணுவ அமைச்சர் யோவ் காலன்ட் (Yoav Gallant) தெரிவித்தார்.