நோபல் பரிசை வென்ற பெண்ணிற்கு அதிகரிக்கும் சிறை தண்டனை
- 2016ல் ஈரான் நீதிமன்றம், நர்கெசுக்கு 16 வருட சிறை தண்டனை வழங்கியது
- தண்டனை முடிந்தாலும், மொபைல் போன் வைத்திருப்பது தடை செய்யப்பட்டுள்ளது
மேற்கு ஆசியாவில் உள்ள அரபு நாடுகளில் ஒன்று, ஈரான்.
ஈரானை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர், 51 வயதாகும் நர்கெஸ் மொகமதி (Narges Mohammadi).
பல வருடங்களாக ஈரான் நாட்டில், பெண் உரிமைகளுக்காக போராடி வந்த பவுதிக பட்டதாரியான நர்கெஸ், ஆடை கட்டுப்பாடு, மரண தண்டனை உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான பல கடுமையான சட்டதிட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
2016 மே மாதம், அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம், தேச விரோத குற்றத்திற்காக 16 வருட சிறை தண்டனை வழங்கியது.
இடையே 2020ல் சில மாதங்கள் விடுதலை செய்து அனுப்பிய அந்நாட்டு அரசாங்கம், 2021ல் அவரை மீண்டும் சிறையில் அடைத்தது.
கடந்த 2023 அக்டோபர் மாதம், சிறையிலிருந்த நர்கெசுக்கு பெண்களுக்கான அடக்குமுறையை எதிர்த்து போராடி வருவதற்கும், மனித உரிமை மற்றும் அனைவருக்குமான சுதந்திரம் குறித்து பிரசாரம் செய்து வருவதற்கும் புகழ் பெற்ற அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
நார்வே தலைநகர் ஓஸ்லோ நகரில், நர்கெசின் மகன் மற்றும் மகள் தாயாரின் சார்பில் பரிசினை பெற்றனர்.
ஆனால், ஈரான் வெளியுறவு துறை, இந்த முடிவை கண்டனம் செய்திருந்தது.
இந்நிலையில், சுமார் 12 வருடங்களை சிறையிலேயே கழித்த நர்கெஸ் மொகமதிக்கு, ஈரான், மேலும் 15 மாத சிறை தண்டனை வழங்கியுள்ளது. சிறையில் அடைக்கப்பட்ட நிலையிலும், மத கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதற்காக அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சிறை தண்டனை காலம் முடிந்தாலும், அவர் ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு வெளியே 2 வருடங்கள் தங்கி இருக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த தண்டனை காலம் முடிவடைந்ததும், மேலும் 2 வருடங்களுக்கு நர்கெஸ் அயல் நாடுகளுக்கு பயணம் செய்வதும், மொபைல் போன் வைத்திருப்பதும் கூட தடை செய்யப்பட்டுள்ளது.
விசாரணையின் போது அவர் நேரில் வரவழைக்கப்படாமல், அவர் இல்லாமலேயே அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை 13 முறை ஈரான் அரசால் கைது செய்யப்பட்டவர், நர்கெஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகெங்கும் மனித உரிமை மற்றும் பெண் உரிமை ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் இத்தீர்ப்பிற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.