உலகம்

அமெரிக்காவுடன் அணு ஆயுத போருக்கு தயார்- வடகொரியா

Published On 2024-09-11 02:52 GMT   |   Update On 2024-09-11 02:52 GMT
  • கொரிய தீபகற்ப பிராந்தியம் பதற்றநிலையில் காணப்பட்டு வருகிறது.
  • அமெரிக்காவின் செயல்பாடு நாளுக்கு நாள் அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் உள்ளது.

பியாங்காங்:

தென் கொரியா தலைநகரான சியோல் அருகே வடகொரியா எல்லையையொட்டி அமெரிக்க ராணுவம் போர்த்தளம் அமைத்து அந்த நாட்டு ராணுவத்துடன் பணியாற்றி வருகிறது. இதனை தொடர்ந்து வடகொரிய ராணுவம் அண்டை நாடுகளான தென் கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்டவற்றை அச்சுறுத்தும் வகையில் அணு ஆயுதங்கள் தாங்கிய ஏவுகணைகளை தயாரித்து தொடர் சோதனையில் ஈடுபடுகிறது.

இதனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வடகொரியா மீது பொருளாதார தடை விதித்துள்ளது. இருப்பினும் வடகொரிய ராணுவம் ஏவுகணை சோதனையில் தொடர்ந்து ஈடுபட்டு அடாவடி காட்டுகிறது.

இதற்கு பதிலடி தரும் வகையில் தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் அமெரிக்க ராணுவம் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபடுகிறது. அமெரிக்காவின் இந்த செயல்பாடு கோபம் மூட்டி வருவதாக வட கொரியா தலைவர் கிம் ஜங் அன் கூறி வருகிறார்.

மேலும் தென்கொரியாவை எதிரி நாடாக அறிவித்து அதன் மீது தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் பகிரங்கமாக அறிவித்தார். இதனால் கொரிய தீபகற்ப பிராந்தியம் பதற்றநிலையில் காணப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் வடகொரியாவில் 76-வது நிறுவன ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. தலைநகர் பியாங்காங்கில் ராணுவ அணிவகுப்புடன் இந்த நிகழ்ச்சி அரங்கேறியது. இதில் வடகொரியா தலைவர் கிம் ஜங் அன் தலைமையேற்று ராணுவ மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

பின்னர் அவர் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது கிம் ஜங் அன், அமெரிக்காவுடன் அணு ஆயுத போருக்கு தயார் என பேசினார். அவர் கூறுகையில், "அமெரிக்காவின் செயல்பாடு நாளுக்கு நாள் அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் உள்ளது. இதனால் அமெரிக்காவுடன் எப்போது வேண்டுமானாலும் போருக்கு தயாராக இருக்க வேண்டும். போரில் அதிகளவிலான அணு ஆயுதங்கள் தேவை இருக்கும் என்பதால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்" என்றார்.

Tags:    

Similar News