"என் சம்மதம் இல்லாமல்தான்..." - முத்த வழக்கில் வீராங்கனையின் வாக்குமூலம்
- 1-0 எனும் கோல் கணக்கில் ஸ்பெயின், இங்கிலாந்தை வீழ்த்தியது
- "நான் எதிர்பாராத நேரத்தில் அவர் முத்தமிட்டார்" என ஹெர்மோசோ நீதிமன்றத்தில் கூறினார்
கடந்த 2023 ஆகஸ்ட் 20 அன்று, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உலக கோப்பை பெண்கள் கால்பந்து போட்டியின் இறுதி போட்டி நடைபெற்றது. இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் இப்போட்டியில் மோதின.
பரபரப்பான ஆட்டத்தின் இறுதியில், ஸ்பெயின் 1-0 எனும் கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
உலக கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் பரிசு பெறும் நிகழ்ச்சியில் ஸ்பெயின் வீராங்கனைகள் பங்கேற்ற போது, அந்நாட்டின் கால்பந்து விளையாட்டு சங்க தலைவர் லூயிஸ் ரூபியாலஸ் (Luis Rubiales) ஜென்னி ஹெர்மோசோ (Jenni Hermoso) எனும் வீராங்கனையை கட்டியணைத்து முத்தமிட்டார்.
தகாத முறையில் நடந்து கொண்ட ரூபியாலஸின் நடவடிக்கை பெரிதும் விமர்சிக்கப்பட்டது.
இதையடுத்து, "நான் நடந்து கொண்ட விதம் தவறுதான். அதை ஒப்பு கொள்கிறேன். ஆனால் அதிகபட்ச மகிழ்ச்சியில் எந்த உள்நோக்கமும் இல்லாமல் அவ்வாறு நடந்து கொண்டேன்" என ரூபியாலஸ் தெரிவித்தார். தொடர்ந்து, அவருக்கு எதிராக எழுந்த கண்டனங்களால், தனது பதவியை ராஜினாமா செய்தார்.
"எனக்கு ரூபியாலஸ் நடந்து கொண்ட விதம் பிடிக்கவில்லை" என ஹெர்மோசோ அப்போது கருத்து தெரிவித்தார்.
பெரும் சர்ச்சையை உண்டாக்கிய இந்நிகழ்வு குறித்து ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட் (Madrid) நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதில் ஹெர்மோசோ, தனது கருத்துக்களை பதிவு செய்தார். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் அவரிடம் விசாரணை நடைபெற்றது.
"என் சம்மதத்துடன் அந்த நிகழ்வு நடைபெறவில்லை. நான் எதிர்பாராத நேரத்தில் ரூபியாலஸ் அவ்வாறு நடந்து கொண்டார்" என ஹெர்மோசோ விசாரணையில் தெரிவித்தார்.
பரிசு வழங்கும் நிகழ்ச்சியின் போது அங்கிருந்த கண்காணிப்பு கேமிரா வீடியோக்களை நீதிமன்றம் ஆய்வு செய்து வருகிறது.
ஸ்பெயின் சட்டப்படி ஒருவரின் சம்மதமில்லாமல் அவருக்கு முத்தமிடுவது பாலியல் குற்றமாக கருதப்படும். எனவே, இப்போது நடைபெறும் விசாரணை முடிவில்தான் இவ்வழக்கில் ரூபியாலிஸ் பாலியல் குற்றம் புரிந்தவராக விசாரிக்கப்படுவாரா என தெரிய வரும்.