உலகம்

அசாதாரணமான ஆபத்தில் பாகிஸ்தான் பொருளாதாரம்: சர்வதேச நாணய நிதியம்

Published On 2023-07-19 11:27 GMT   |   Update On 2023-07-19 11:27 GMT
  • சர்வதேச நாணய நிதியம் நிதி வழங்க பல நிபந்தனைகளை விதித்தது
  • சுமார் ரூ.25 ஆயிரம் கோடி கடனாக வழங்கியுள்ளது

பாகிஸ்தானில் சில வருடங்களாகவே பொருளாதார சிக்கல் நிலவுகிறது. சமீப காலமாக அங்கு நிலைமை மோசமடைந்து வருகிறது.

பயங்கரவாதம் மற்றும் ஸ்திரத்தன்மையற்ற அரசியல் சூழ்நிலை காரணமாக பாகிஸ்தான் பொருளாதார சிக்கலில் தவித்து வருகிறது. இலங்கை போன்று பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. நிலைமை மோசமானதை தொடர்ந்து அந்நாடு பல நாடுகளிடம் உதவி கோரியது.

சர்வதேச நாணய நிதியம் நிதி வழங்க பல நிபந்தனைகளை விதித்தது. அதற்கு பாகிஸ்தான் சம்மதித்த பிறகு, சுமார் ரூ.25 ஆயிரம் கோடி கடனாக வழங்கியுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானின் எதிர்கால விரிவான பொருளாதார நிலையை ஆராய்ந்த நிதியம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

மீண்டும் ஒருமுறை இது போன்ற ஒரு பெரும் தொகை பாகிஸ்தானுக்கு தேவைப்படுகிறது. பாகிஸ்தானின் பொருளாதாரம், சிக்கலான மற்றும் பன்முகம் கொண்ட சவால்களை சந்தித்து ஒரு அபாயகரமான நிலையில் இருக்கிறது.

இந்த சவால்களை எதிர்கொள்ள அந்நாட்டிற்கு அந்நிய வழிகளில் பல உதவிகள் தேவைப்படும். இது மட்டுமல்லாமல் ஐஎம்எஃப் நிதியும் மீண்டுமொரு முறை தேவைப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருக்கிறது.

மின்சார மற்றும் எரிபொருள் ஆகிய இரு துறைகளிலும் அந்நாடு பெருமளவில் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இதனால் ஐஎம்எஃப் உடன் கடன் பெறுவதற்காக செய்து கொண்ட உடன்படிக்கையின்படி நுகர்வோருக்கு கட்டணத்தை உயர்த்த சம்மதித்து உள்ளது.

இதற்கு உள்நாட்டிலேயே பல எதிர்ப்புகளை அந்நாடு சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News