உலகம்
அமெரிக்காவில் மீண்டும் பரபரப்பு - அலாஸ்கா கடற்கரையில் பறந்த மர்ம பொருளை சுட்டு வீழ்த்திய ராணுவம்
- அலாஸ்கா கடற்கரை வான்வெளியில் பறந்த மர்ம பொருளை பென்டகன் சுட்டு வீழ்த்தியது.
- இந்த மர்ம பொருள் சுமார் 40,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது என்றனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் அலாஸ்கா கடற்கரையில் உள்ள வான்வெளியில் பறந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத மர்ம பொருளை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், இந்த மர்ம பொருள் சுமார் 40,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது என்றும், விமான பயணங்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து, அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டதன் பேரில் ராணுவம் அந்தப் பொருளை சுட்டு வீழ்த்தியது. அந்தப் பொருள் அமெரிக்க கடற்பரப்பில் விழுந்தது.
ஏற்கனவே கடந்த வாரம் சீன உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.