உலகம்

ராணி எலிசபெத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் பொதுமக்களை படத்தில் காணலாம்.

ராணி எலிசபெத் இறுதிச்சடங்கில் பங்கேற்க மக்கள் வெள்ளமென திரள்கிறார்கள்

Published On 2022-09-16 02:08 GMT   |   Update On 2022-09-16 02:08 GMT
  • 24 மணி நேரமும் மக்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள்.
  • 19-ந்தேதி இறுதிச்சடங்கு நடக்கிறது.

லண்டன் :

இங்கிலாந்து நாட்டின் ராணியாக 70 ஆண்டு காலம் அரசாட்சி நடத்தி வந்த ராணி எலிசபெத், தனது 96-வது வயதில் கடந்த 8-ந் தேதி தனக்கு மிகவும் பிடித்தமான ஸ்காட்லாந்தின் பால்மோரல் கோட்டையில் மரணம் அடைந்தார். அவரது மறைவு, இங்கிலாந்து மக்களை பெருத்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. ராணியின் உடல், அங்கிருந்து வான் வழியாகவும், சாலை வழியாகவும் லண்டனுக்கு எடுத்து வரப்பட்டது. பக்கிங்ஹாம் அரண்மனையில் அதிகாரிகள், பணியாளர்கள் இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர் நேற்றுமுன்தினம் மதியம், ராணியின் உடல் பீரங்கி வண்டியில் ஏற்றி, குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. அதையடுத்து ராணியின் உடல், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஊர்வலத்தில் ராணியின் மகனான மன்னர் சார்லஸ், இளவரசர்கள் வில்லியம், ஹாரி ஆகியோர் நடந்து சென்றனர்.

அதையடுத்து வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில ராணியின் உடல், அங்குள்ள மேடையில் வைக்கப்பட்டது. அதுவும் ராஜ மரியாதையுடன், கிரீடத்துடன் வைக்கப்பட்டுள்ளது.

ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டியை கண்டு அஞ்சலி செலுத்துவதற்காக பொதுமக்கள் வெள்ளமென திரண்டு வருகின்றனர். . பல கி.மீ. தொலைவுக்கு நீண்ட வரிசையில் பகல் இரவு பாராமல், மணிக்கணக்கில் கால் கடுக்க காத்து நின்று ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டியை கண்டு அவர்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள். சிலர் ஓரிரு வினாடிகள் நின்று பிரார்த்தனையும் செய்கிறார்கள்.

இருப்பினும் 16 கி.மீ. தொலைவுக்கு மேல் வரிசை கட்டி நிற்க மக்களுக்கு அனுமதி இல்லை.

24 மணி நேரமும் மக்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள். இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, 19-ந் தேதி திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 6.30 மணியுடன் முடிவுக்கு வரும். இந்த அஞ்சலி நிகழ்வு தொடர்ந்து பி.பி.சி. தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

19-ந் தேதி நடைபெறுகிற அரசு இறுதிச்சடங்கு நிகழ்வு மற்றும் விண்ட்சார் புனித ஜார்ஜ் தேவாலயத்தில் நடக்கிற நிகழ்வுகளின் விவரங்களை பக்கிங்ஹாம் அரண்மனை நேற்று வெளியிட்டது.

இதன் முக்கிய தகவல்கள் வருமாறு:-

* 19-ந் தேதி உள்ளுர் நேரப்படி காலை 11 மணிக்கு வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் உலக நாடுகளின் தலைவர்கள், மிக முக்கிய பிரமுகர்கள் என 2 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் அரசு மரியாதை நிகழ்ச்சி நடைபெறும்.

* அரசு மரியாதை செலுத்திய உடன் எலிசபெத்தின் உடல் அடங்கிய சவப்பெட்டி லண்டன் நகரத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதி வழியாக குதிரை பூட்டப்பட்ட பீரங்கி வண்டியில் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அருகில் உள்ள வெலிங்டன் ஆர்ச் வரை எடுத்துச்செல்லப்படும். * அதன்பின்னர் உடல், விண்ட்சார் கோட்டைக்கு அருகேயுள்ள செயிண்ட் ஜார்ஜ் தேவாலயத்துக்கு அர்ப்பணிப்பு பிராத்தனைக்காக எடுத்துச்செல்லப்படும்.

* பிரார்த்தனை முடிந்த உடன் ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டி, 'ராயல் வால்ட்' என்று அழைக்கப்படுகிற விண்ட்சார் கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள அடக்க அறையில் இறக்கப்படும்.

* இறுதியாக அரச குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொள்கிற அடக்க ஆராதனை, மன்னர் ஆறாம் ஜார்ஜ் நினைவு தேவாலயத்தில் நடக்கிறது. அதன்பின்னர் ராணியின் உடலானது, கடந்த ஆண்டு மறைந்த ராணியின் கணவர் இளவரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே நல்லடக்கம் செய்யப்படும்.

* ராணி இறுதிச்சடங்கின்போது ஐக்கிய ராஜ்யம் ( இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து) முழுவதும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News