உலகம்

அரிசி விலை உயர்வு எதிரொலி: மாற்று ரகத்திற்கு மாறிய மக்கள்

Published On 2024-02-14 10:20 GMT   |   Update On 2024-02-14 10:20 GMT
  • நைஜீரிய மக்களின் பிரதான உணவு தானியம் அரிசி
  • அஃபாஃபாடாவை ஆலை அதிபர்கள் தூக்கி எறிந்து வந்தனர்

கினியா வளைகுடா பகுதியில் உள்ள ஆப்பிரிக்க நாடு, நைஜீரியா. இதன் தலைநகரம், அபுஜா (Abuja).

நைஜீரியா முழுவதும் விலைவாசி உயர்வு மக்களை பெரிதும் வாட்டி வருகிறது.

அந்நாட்டு மக்களின் பிரதான உணவு தானியம், அரிசி.

உயர்ந்து வரும் அரிசி விலையின் காரணமாக, அந்நாட்டு மக்கள் அரிசி ஆலைகளில் முன்னர் ஒதுக்கப்பட்டு வந்த அஃபாஃபாடா (afafata) எனும் தடியான, சமைக்க கடினமான அரிசி வகையை பயன்படுத்த துவங்கியுள்ளனர்.

சில வருடங்களுக்கு முன், அஃபாஃபாடா அரிசியை, அரிசி ஆலை அதிபர்கள் மீன்களுக்கு உணவிட பயன்படுத்துபவர்களிடம் மட்டுமே குறைந்த விலைக்கு விற்று வந்தனர்; சில நேரங்களில் விற்காமல் தூக்கி எறிவார்கள்.

ஆனால், தற்போது அங்கு நிலைமை மாறி வருகிறது.

ஏழை, எளிய மக்கள் அதிகளவில் பயன்படுத்த தொடங்கி உள்ளதால், மீன் பண்ணை வைத்திருந்தவர்களுக்கு இப்போது அஃபாஃபாடா கிடைப்பது அரிதாகி வருகிறது.

உலகளாவிய பொருளாதார மந்தநிலை, எரிபொருளுக்கான மானியத்தை அதிபர் போலா டினுபு (Bola Tinubu) ரத்து செய்தது, "நைரா" (Naira) எனும் அந்நாட்டு கரன்சி மீதான பண மதிப்பிழப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நைஜீரியாவில் உணவு பண்டங்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.

பல மாநிலங்களில், விலைவாசி உயர்வுக்கு எதிராக மக்கள் போராட்டத்தை நடத்தினர்.

கடந்த 2 மாதங்களில் நைஜீரியாவில் விலைவாசி 2 மடங்காகி உள்ளது.

வழக்கமாக, அந்நாட்டு நடுத்தர மற்றும் ஏழை மக்கள் வாங்கும் 50 கிலோ அரிசி மூட்டை தற்போது சுமார் ரூ.4400 ($53) எனும் மதிப்பில் விற்கப்படுகிறது. இது கடந்த ஆண்டு விற்கப்பட்ட விலையை விட 70 சதவீதம் அதிகம் என்பதால் பெரும்பாலான மக்களால் தரமான அரிசியை வாங்க முடியவில்லை.

Tags:    

Similar News