வால்மார்ட் கட்டிடத்தை விமானம் மூலம் தகர்க்க முயன்ற நபர் கைது- அமெரிக்க காவல்துறை விசாரணை
- விமானத்தை திருடிய நபரிடம் பைலட் உரிமம் இல்லை.
- பயங்கரவாத அச்சுறுத்தல் விடுத்ததாக வழக்குப் பதிவு.
டுபேலா:
அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணம் டுபேலா நகரில் பிரபல சில்லறை வர்த்தக நிறுவனம் வால்மார்ட் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தை விமானம் மூலம் தகர்க்கப் போவதாக விமானி ஒருவர் மிரட்டல் விடுத்தார். விமானத்தில் சுற்றியபடி இருந்த அந்த 29 வயது இளைஞருடன் டுபேலா நகர போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அந்த நபர் விமானத்தை டுபெலோவிற்கு வடகிழக்கே 60 மைல் தொலைவில் உள்ள ஆஷ்லாந்து வயல் வெளியில் தரையிறக்கினார். விரைந்து சென்ற போலீசார் அவரை கைது செய்தனர். போலீஸ் காவலில் வைக்கப்பட்ட அந்த நபர் கோரி பேட்டர்சன் என அடையாளம் காணப்பட்டார். அவரிடம் பைலட் உரிமம் இல்லை என்பதும், 10 ஆண்டுகளாக டுபெலோ நகர விமான நிலையத்தில் அவர் லைன்மேனாக இருந்து வந்ததும் தெரிய வந்துள்ளது.
விமானங்களுக்கு எரிபொருள் நிரம்பும் பணியிலும் ஈடுபட்டு வந்த பேட்டர்சன், 9 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானத்தை திருடி அதை வைத்து மிரட்டல் விடுத்தது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து திருட்டு மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல் விடுத்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஆரம்ப அச்சுறுத்தலுக்குப் பிறகு, அவர் தன்னையோ அல்லது வேறு யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை என்றும் டுபேலா நகர போலீசார் கூறியுள்ளனர். இந்நிலையில் மிசிசிப்பி மாகாண ஆளுநர் ரீவ்ஸ் தமது ட்விட்டர் பதிவில் நிலைமை சீரடைந்து விட்டதாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை" என்றும் தெரிவித்துள்ளார்.