உலகம்

டிரம்பை கொல்ல சதி: ஈரான் உளவாளி கைது

Published On 2024-08-07 06:28 GMT   |   Update On 2024-08-07 06:28 GMT
  • ஆசிப்மெர்ச்சன்ட்டுக்கு ஈரானுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது.
  • முன்பணமாக 5 ஆயிரம் அமெரிக்க டாலர்.

வாஷிங்டன்:

அமெரிக்காவில் பாகிஸ்தானை சேர்ந்த ஈரான் உளவாளி ஆசிப் மெர்ச்சன்ட் (வயது 46) என்பவரை உளவுத்துறையினர் சமீபத்தில் கைது செய்துள்ளனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் உள்பட பல முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை கொல்ல சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது. ஆசிப்மெர்ச்சன்ட்டுக்கு ஈரானுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது.

பாகிஸ்தானில் இருந்து அமெரிக்கா புறப்படுவதற்கு முன்பு ஆசிப் மெர்ச்சன்ட் ஈரான் சென்று வந்ததாகவும், அமெரிக்காவில் அரசியல் கொலைகளை செய்வதற்காக சதித்திட்டத்துடன் அவர் ஈரானில் இருந்து வந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்காவில் தனது சதித்திட்டத்தை நிறைவேற்ற சிலரை அணுகியுள்ளார். ஆனால் அந்த நபர்கள் போலீஸ் அதிகாரிகள் ஆவார்கள். கூலிப்படை போல் நடித்த அதிகாரிகளி டம் ஆசிப் மெர்ச்சன்ட் தனது திட்டத்தை தெரிவித்துள்ளார்.

ஆவணங்களைத் திருடுதல், அரசியல் பேரணிகளில் போராட்டங்களை ஏற்பாடு செய்தல், ஒரு அரசியல் நபரை கொல்வது ஆகிய மூன்று திட்டங்களை அவர் தெரிவித்துள்ளார். மேலும் முன்பணமாக 5 ஆயிரம் அமெரிக்க டாலர்களை கொடுத்துள்ளார்.

அதன்பின் அமெரிக்காவில் இருந்து புறப்பட முயன்றபோது ஆசிப் மெர்ச்சன்ட்டை கைது செய்தனர். இதுதொடர்பாக போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் டொனால்ட் டிரம்பை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார் என்று நேரடியாக தெரிவிக்கப்படவில்லை.

ஆனால் சில முக்கிய ஆதாரங்களின்படி டிரம்பை கொலை செய்யும் திட்டமும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி ஈராக் சென்றபோது அவரை அமெரிக்கா கொலை செய்தது. இதற்கு பதிலடியாக முன்னாள் அதிபர் டிரம்பை பழி வாங்குவோம் என்று ஈரான் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் ஈரான் உளவாளி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News