உலகம்

பாரதம் உங்களால் பெருமை கொள்கிறது - அஹ்லன் மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி

Published On 2024-02-13 16:07 GMT   |   Update On 2024-02-13 16:07 GMT
  • பிரதமர் மோடி "அஹ்லன் மோடி" நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
  • இந்திய சமூகத்தினர் இடையே பிரதமர் மோடி உரையாற்றினார்.

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ள இருக்கிறார். பிரதமர் மோடி வருகையை ஒட்டி அபுதாபியில் இந்திய சமூகத்தினர் கலந்து கொள்ளும் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஐக்கிய அரபு அமீரகம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அமீரக அதிபர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யானை சந்தித்தார். சந்திப்பின் போது இரு தரப்பு உறவுகளை மேம்படுத்தும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. இத்துடன் யு.பி.ஐ. ரூபே கார்டு சேவையை இருவரும் இணைந்து அறிமுகம் செய்தனர்.

இதைத் தொடர்ந்து ஐ.ஐ.டி. டெல்லி அபு தாபி வளாகத்தில் பயின்று வரும் முதல் பேட்ச் மாணவர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். பிறகு அபுதாபி ஜாயித் ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்திற்கு சென்ற பிரதமர் மோடி "அஹ்லன் மோடி" நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

 


பிரதமர் மோடியை காண ஏராளமான இந்திய சமூகத்தினர் இந்த மைதானத்திற்கு அதிகளவில் வருகை தந்தனர். மைதானத்திற்குள் பிரதமர் மோடி நுழைந்த போது இந்திய சமூகத்தினர் மோடி, மோடி என கோஷம் எழுப்பினர். நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக 700 நடன கலைஞர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு நிகழ்ச்சிகளை தொடர்ந்து இந்திய சமூகத்தினர் இடையே பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "இன்று அபுதாபியில் நீங்கள் வரலாற்றை உருவாக்கி இருக்கின்றீர்கள். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நீங்கள், ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வந்துள்ளீர்கள். ஆனாலும், அனைவரின் இதயமும் இணைந்தே இருக்கிறது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க மைதானத்தில் ஒவ்வொருத்தரின் இதய துடிப்பும் மற்றும் சுவாசத்தில் இந்தியா - ஐக்கிய அரபு அமீரகத்தின் உறவு நீடிக்கட்டும் என்றே சொல்கிறது."

 


"நான் எனது குடும்ப உறுப்பினர்களை காண இங்கு வந்துள்ளேன். நீங்கள் பிறந்த இடத்தின் மண்வாசனை மற்றும் 140 கோடி மக்களின் தகவலை கொண்டு வந்திருக்கிறேன். அந்த தகவல் என்னவென்றால், 'பாரதம் உங்களால் பெருமை கொள்கிறது' என்பதே ஆகும்."

"2015-இல் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு முதல் முறையாக வந்த நினைவு இன்றும் என் மனதில் அப்படியே இருக்கிறது. மூன்று தசாப்தங்களுக்கு பிறகு ஒரு இந்திய பிரதமர் ஐக்கிய அரபு அமீரகம் வருவது அப்போது தான் முதல் முறையாக இருந்தது. மேலும் தந்திர உலகமும் எனக்கு புதிதான ஒன்று. விமான நிலையத்தில் அன்றைய பட்டத்து இளவரசரும், இன்றைய அதிபருமான அவரது சகோதரர்கள் ஐந்து பேரும் என்னை வரவேற்றனர். அவர்களின் கண்களில் இருந்த பிரகாசத்தை என்னால் மறக்கவே முடியாது. அந்த வரவேற்பு எனக்கானது மட்டுமல்ல 140 கோடி இந்தியர்களுக்கானது."

 


"கடந்த பத்து ஆண்டுகளில் ஏழாவது முறையாக ஐக்கிய அரபு அமீரகம் வருகிறேன். சகோதரர் ஷேக் முகமது பின் ஜாயத் என்னை வரவேற்க இன்று விமான நிலையம் வந்திருந்தார், இது அவரை சிறப்பான ஒருவராக மாற்றுகிறது. அவரை நான்கு முறை இந்தியாவுக்கு வரவேற்ற வாய்ப்பு நமக்கு கிடைத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். சில நாட்களுக்கு முன்பு கூட அவர் குஜராத் வந்திருந்தார். அவருக்கு நன்றி தெரிவிக்க லட்சக்கணக்கானோர் வீதிகளில் கூடியிருந்தனர்."

"ஐக்கிய அரபு அமீரகம் எனக்கு மிகப்பெரிய விருது- தி ஆர்டர் ஆஃப் ஜாயத் வழங்கி இருப்பதில் நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். இந்த கௌரவம் எனக்கானது மட்டுமல்ல, கோடிக்கணக்கான இந்தியர்களான உங்களுக்குமானதும் கூட. 2015-ம் ஆண்டு அபுதாபியில் கோவில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை உங்கள் சார்பாக நான் அவரிடம் வைத்தேன், அவர் உடனே அதற்கு அனுமதி கொடுத்தார். தற்போது இந்த கோவிலை பிரமாண்டமாக திறப்பதற்கான நேரம் வந்துவிட்டது," என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News