null
டொமினிகா நாட்டின் உயரிய விருதைப் பெற்றார் பிரதமர் மோடி
- கயானாவின் ஜார்ஜ் டவுனில் இந்தியா-காரிகாம் உச்சி மாநாடு நடைபெற்றது.
- அப்போது டொமினிகாவின் உயர்ந்த தேசிய விருது பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்டது.
ஜார்ஜ் டவுன்:
கொரோனா வைரஸ் பெருந்தொற்றின்போது கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரியில் இந்தியா, டொமினிகாவுக்கு 70,000 டோஸ் ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியை அன்பளிப்பாக வழங்கியது. அத்துடன், டொமினிகாவின் சுகாதாரம், கல்வி, தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் இந்தியா உதவிகளை அளித்தது.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தங்கள் நாட்டின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்க உள்ளதாக டொமினிகா அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது.
இந்நிலையில், கயானாவின் ஜார்ஜ் டவுனில் இந்தியா-காரிகாம் உச்சி மாநாடு நடைபெற்றது. அப்போது டொமினிகா அதிபர் சில்வானி பர்ட்டன் பிரதமர் நரேந்திர மோடிக்கு, டொமினிகா விருதை வழங்கி கவுரவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி டொமினிகாவின் உண்மையான நண்பர். கோவிட் தொற்றின்போது சரியான நேரத்தில் டொமினிகாவுக்கு உதவினார். அவரது ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவின் வலிமையை வெளிப்படுத்தும் விதமாகவும் எங்கள் நாட்டின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்குகிறோம். இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் வலுப்பட வேண்டும் என விரும்புகிறோம் என டொமினிகாவின் பிரதமர் ரூஸ்வெல்ட் ஸ்கெர்ரிட் தெரிவித்துள்ளார்.