உலகம்

பாகிஸ்தானில் தொடர் மின்வெட்டு: மக்கள் வீதியில் இறங்கி போராட்டம்

Published On 2022-06-29 02:31 GMT   |   Update On 2022-06-29 02:31 GMT
  • போராட்டக்காரர்கள் நகரின் முக்கிய சாலைக்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், ரப்பர் குண்டுகளால் சுட்டும் போலீசார் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.

இஸ்லாமாபாத் :

நிதி நெருக்கடியில் தவித்து வரும் பாகிஸ்தானில் கடுமையான மின்பாற்றக்குறை நிலவி வருகிறது. இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் ஒரு நாளில் 12 முதல் 14 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுவதாக தெரிகிறது. இதனால் அந்த நகர மக்கள் கடும் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

இந்த நிலையில் தொடர் மின்வெட்டு காரணமாக ஆத்திரமடைந்த கராச்சி நகர மக்கள் நேற்று முன்தினம் இரவு திடீர் போராட்டத்தில் குதித்தனர். நகரில் உள்ள முக்கிய சாலையில் குவிந்த நூற்றுக்கணக்கான மக்கள் சாலையில் டயர்களை தீவைத்து கொளுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் 2-வது நாளாக நேற்றும் மின்வெட்டுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் அதை ஏற்க மறுத்த போராட்டக்காரர்கள் மீண்டும் நகரின் முக்கிய சாலைக்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து, கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், ரப்பர் குண்டுகளால் சுட்டும் போலீசார் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News