உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கு தீவிரவாதம் மிகப்பெரும் சவாலாக உள்ளது- ராஜ்நாத்சிங்
- தீவிரவாதத்தை அனைத்து வழிகளிலும் களைய இந்தியா உறுதி பூண்டுள்ளது.
- தாஷ்கண்டில் உள்ள லால் பகதூர் சாஸ்திரியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
தாஷ்கண்ட்:
உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்புத்துறை மந்திரிகள் மாநாட்டில், பங்கேற்ற மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் பங்கேற்று உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:
உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கு எதிராக தீவிரவாதம் மிகப்பெரும் சவாலாக இருக்கிறது. தீவிரவாதத்தை அனைத்து வழிகளிலும் களைந்து பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை நிலவச் செய்ய இந்தியா உறுதி பூண்டுள்ளது.
தீவிரவாதிகளின் புகலிடமாக ஆஃப்கன் பிராந்தியத்தை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது, ஆப்கானிஸ்தானில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை நிலவ இந்தியா ஆதரவு அளிக்கிறது.பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தேசிய அளவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். அனைத்து வழிகளிலும் தீவிரவாதத்தை ஒழிப்பதில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகள் ஒருங்கிணைந்து போராட வேண்டும்.
ரஷியா உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வுகாண இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற இந்தியா ஆதரவு அளிக்கிறது.அங்கு மனிதநேய உதவி அளிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள ஐ நா பொதுச் செயலாளர், ஐ நா அமைப்புகள், சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றுக்கு இந்தியா ஆதரவு அளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக தாஷ்கண்டில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் சிலைக்கு ராஜ்நாத்சிங் மரியாதை செலுத்தினார். அவரது எளிமை மற்றும் நேர்மைக்காக, மறைவுக்கு பின்னர் அவருக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.