இலங்கையுடன் சர்வதேச நாணய நிதியம் ஒப்பந்தம்- பொருளாதார மறுமலர்ச்சிக்கான ஆரம்பம் என ரணில் கருத்து
- இலங்கைக்கு கடன் வழங்க சர்வதேச நிதியம் நடவடிக்கை.
- சமூக-பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க இந்த ஒப்பந்தம் ஆறுதல்.
கொழும்பு:
பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, உணவு, மருந்து, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்கள் நடத்திய போராட்டத்தில் அநநாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்ற நிலையில், அவரது தலைமையிலான அரசு பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவியை நாடியது.
இதையடுத்து சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு வந்தது. அவர்களுக்கும், இலங்கை அரசு அதிகாரிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் முடிவில் இருதரப்புக்கும் இடையே அதிகாரிகள் மட்டத்திலான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, முதல் கட்டமாக இலங்கைக்கு அடுத்த 4 ஆண்டுகளுக்கு 290 கோடி டாலர் (ரூ.23 ஆயிரத்து 200 கோடி) கடன் வழங்க சர்வதேச நிதியம் ஒப்புக்கொண்டது.
சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய ரணில் விக்கிரமசிங்கே, சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்பட்டுள்ள இந்த உடன்படிக்கை இலங்கை வரலாற்றில் முக்கியமான முன்னேற்றம் என்றும், புதிய பொருளாதார மறுமலர்ச்சிக்கான ஆரம்பம் என்றும் குறிப்பிட்டார்.
தற்போதைய நிலையில் நாடு திவால் நிலையில் இருந்து விடுபடுவது முக்கியம் என குறிப்பிட்ட அவர், கடன்களை செலுத்துவதன் மூலம் சமூக-பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க இந்த உடன்படிக்கை சற்று ஆறுதல் அளிப்பதாக அவர் கூறினார்.