உலகம் (World)

தமிழர்களுடனான நல்லிணக்க திட்டங்களை விரைவுபடுத்த விக்ரமசிங்கே உத்தரவு

Published On 2023-06-11 02:33 GMT   |   Update On 2023-06-11 02:33 GMT
  • தமிழர் நல்லிணக்க திட்டங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை அவர் ஆய்வு செய்தார்.
  • தற்போதைய நிலவரம் குறித்து அவர் மீண்டும் ஆலோசனை நடத்தினார்.

கொழும்பு :

இலங்கையில் பல ஆண்டுகளாக நீண்டு வரும் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண அதிபர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சிங்களர்களின் எதிர்ப்பையும் மீறி, தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வை வழங்கும் 13-வது சட்ட திருத்தத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட தமிழர் நல்லிணக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அவர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இது தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் உள்பட ஏற்கனவே பல்வேறு ஆலோசனை கூட்டங்களை நடத்திய அவர், இது தொடர்பான செயல் திட்டங்களை வகுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார்.

இந்த பணிகளின் தற்போதைய நிலவரம் குறித்து அவர் மீண்டும் ஆலோசனை நடத்தினார். இதில், தமிழர்களுடன் நல்லிணக்கத்துக்கான செயல்திட்டத்தை அமல்படுத்துவதற்கு தேவையான தேசிய கொள்கையை விரைவாக உருவாக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முன்னதாக தமிழர் நல்லிணக்க திட்டங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை அவர் ஆய்வு செய்தார். குறிப்பாக, சட்டம் வகுத்தல், நிறுவன செயல்பாடுகள், நிலப்பிரச்சினைகள், கைதிகள் விடுதலை, அதிகார பரவலாக்கம் ஆகிய 5 முக்கிய துறைகள் குறித்து விரிவாக ஆய்வு நடத்தினார்.

மேலும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமல்படுத்துதல், தேசிய நிலச்சபை நிறுவுதல், தேசிய நிலக்கொள்கை உருவாக்குதல் போன்ற அம்சங்களும் ஆலோசிக்கப்பட்டன.

இதைத்தவிர காணாமல்போனோர் அலுவலகத்தின் மேம்படுத்தப்பட்ட செயல்பாடுகள், டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கைகள் மற்றும் காணாமல் போனவர்களுக்கான சான்றிதழ்களை வழங்குதல் உள்ளிட்டவற்றின் அவசியத்தையும் ரணில் விக்ரமசிங்கே கூட்டத்தில் வலியுறுத்தினார். நிவாரண அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகம் போன்றவற்றை நிறுவுவதற்கான தற்போதைய முயற்சிகளை அடுத்த 2 மாதங்களுக்குள் பூர்த்தி செய்யுமாறும் அதிபர் விக்ரமசிங்கே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

இறுதியாக இந்தத் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்த விரிவான அறிக்கையும் சமர்ப்பிக்குமாறு அவர் அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் இலங்கை வெளியுறவு மந்திரி அலி சாப்ரி, தேசிய பாதுகாப்பு மூத்த ஆலோசகர் சகலா ரத்நாயகே உள்பட மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News