உலகம்

சிரியாவின் அலெப்போ விமான நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல்: சேவைகள் முடங்கின

Published On 2023-08-28 08:10 GMT   |   Update On 2023-08-28 08:10 GMT
  • ஈரானும், லெபனானும் சிரியாவில் கிளர்ச்சிகாரர்களுக்கு ஆயுத உதவிகள் செய்கின்றன
  • அலெப்போவில் விமான சேவைகள் முடங்கி உள்ளது

மத்திய கிழக்கு ஆசியாவில் மத்திய தரைக்கடல் பகுதியின் அருகே உள்ள நாடு இஸ்ரேல்.

பெரும்பாலும் யூதர்கள் வாழும் இஸ்ரேல் நாட்டை, தங்களுடையது என கூறி பல வருடங்களாக பாலஸ்தீனியர்கள் போராடி வருகின்றனர். பாலஸ்தீனியர்களுக்கு சில அரேபிய நாடுகளும், இஸ்ரேலுக்கு அமெரிக்கா உட்பட சில மேற்கத்திய நாடுகளும் ஆதரவு தருவது தொடர்கிறது.

தனது நாட்டின் மீது ராணுவ மற்றும் பயங்கரவாத தாக்குதல்களில் பாலஸ்தீனமோ அதன் ஆதரவு நாடுகளோ ஈடுபடுவதை தடுக்கும் விதமாகவும், அண்டை நாடுகளில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுத உதவிகள் கிடைப்பதை தடுக்கும் விதமாகவும் இஸ்ரேல், அண்டை நாடுகளின் மீது சில முன்னெச்சரிக்கை தாக்குதல் நடவடிக்கைகளை நடத்துவது வழக்கம்.

பாலஸ்தீனத்திற்கு உதவும் வகையில் ஈரானின் ஆதரவுடன் அதன் தலைநகர் டெஹ்ரானிலிருந்தும், லெபனான் நாட்டிலிருந்து அந்நாட்டில் இயங்கும் ஹெஸ்பொல்லா அமைப்பினரிடமிருந்தும் சிரியாவிற்கு ராணுவ ஆயுதங்கள் அனுப்பப்படுவது அடிக்கடி நடைபெறும். இதனை தடுக்கும் விதமாக இஸ்ரேல் தனது அண்டை நாடான சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ் மற்றும் அலெப்போ நகர விமான நிலையங்கள் மீதும், அந்நாட்டு துறைமுகங்கள் மீதும் சமீபகாலங்களில் பலமுறை தாக்குதல்கள் நடத்தியிருக்கிறது.

இன்று காலை 04:30 மணியளவில் வடக்கு சிரியாவின் அலெப்போ நகர விமான நிலையத்தின் மீது மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து போர் விமானங்கள் மூலம் இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளதாக சிரியா அறிவித்திருக்கிறது. இத்தாக்குதலில் விமான நிலையத்தின் ஓடுதளம் சேதமடைந்தது. இதனால் விமான சேவைகளும் அங்கு பெரிதும் தடைபட்டிருக்கிறது.

ஆனால், உயிரிழப்பு ஏதும் இல்லை.

இவ்வருடம் ஏற்கனவே இரண்டு முறை இஸ்ரேல் இந்த விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியிருந்ததும் அப்போதும் தற்காலிகமாக விமான சேவைகள் முடங்கியதும் குறிப்பிடத்தக்கது.

இத்தாக்குதலுக்காக சிரியா இஸ்ரேலை குற்றம் சாட்டினாலும், இஸ்ரேல் இது குறித்து எதுவும் கருத்து கூறவில்லை.

Tags:    

Similar News