தன்னை தானே சுட்டு கொண்டு உயிரிழந்த சிறுமி: அமெரிக்காவில் பயங்கரம்
- புறநகர் பகுதியில் வெட்டவெளி விருந்தில் ஜேலி கலந்து கொண்டார்
- காவல்துறை அதிகாரி நெருங்கி வந்ததும் ஜேலி துப்பாக்கியை எடுத்தார்
அமெரிக்காவின் மத்தியமேற்கு மாநிலம் கன்சாஸ் (Kansas). இதன் தலைநகரம் டொபேகா (Topeka).
இங்குள்ள க்ளவுட் கவுன்டி பிராந்தியத்தில் வசித்து வந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த ஜேலி சில்ஸன் (Jaylee Chillson) எனும் 14 வயது சிறுமி, சில தினங்களுக்கு முன் வீட்டை விட்டு ஓடி விட்டாள். இத்தகவல் க்ளவுட் கவுன்டி காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.
ஜேலி தனது நண்பர்களுடன் ஊருக்கு வெளியே உள்ள அரோரா எனும் புறநகர் பகுதியில் ஒரு வெட்டவெளி விருந்தில் கலந்து கொண்டிருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அவளை வீட்டிற்கு வருமாறு அழைத்தனர். அப்போது ஒரு காவல்துறை அதிகாரி அவள் தப்பி செல்லாதவாறு இருக்க அவளை பிடித்து கொள்ள முயன்றார்.
ஆனால், அதிகாரிகள் என்ன சொல்லியும் கேட்க மறுத்த அச்சிறுமி, ஒரு கட்டத்தில் திடீரென ஒரு துப்பாக்கியை எடுத்து தன்னை தானே சுட்டு கொண்டார். அதிர்ச்சியடைந்த அங்கிருந்த காவல்துறை அதிகாரியும், தீயணைப்பு அதிகாரிகளும் அச்சிறுமிக்கு உயிர்காக்கும் முதலுதவிகளை செய்தனர். ஆனால் இந்த முயற்சிகள் பலனளிக்காததால் அச்சிறுமி உயிரிழந்தார்.
விருந்துக்கு வந்திருந்த பலரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
தனது மகளை பறி கொடுத்த ஜேலியின் தந்தை உருக்கமாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.