டிரம்பை விட பைடன் அதிபராவதையே விரும்புகிறோம் - புதின்
- டிரம்பின் நடவடிக்கைகளை யூகிக்க முடியாது என்றார் புதின்
- நேட்டோ குறித்த டிரம்பின் பார்வையில் நியாயம் உள்ளது என்றார் புதின்
உலகிலேயே பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவில், இவ்வருட நவம்பர் மாதம், அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
இம்முறை, ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன், குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகிய இருவரும் ஒருவரையொருவர் எதிர்த்து தீவிரமாக களமிறங்கி உள்ளனர்.
அயல்நாடுகளுடன் உள்ள அமெரிக்காவின் உறவு நிலை குறித்து அதிபர் பைடனும், டிரம்பும் நேரெதிர் சித்தாந்தங்களை உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மற்றொரு வல்லரசு நாடான ரஷியாவின் அதிபர் விளாடிமிர் புதின் (Vladimir Putin), அந்நாட்டின் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அதில் அமெரிக்காவில் நடைபெறவுள்ள தேர்தல் மற்றும் அதிபர் வேட்பாளர்கள் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு புதின் பதிலளித்ததாவது:
இரண்டாம் முறையாக டொனால்ட் டிரம்ப் அதிபராவதை விட ஜோ பைடன் வருவதையே ரஷியா விரும்பும்.
பைடன் நீண்ட அனுபவம் உடையவர் மட்டுமல்ல; அவர் நடவடிக்கைகள் எளிதில் யூகிக்க கூடியவை. அவர் அந்த காலத்து அரசியல் சிந்தனைகள் மற்றும் நடவடிக்கைகள் கொண்டவர்.
ஆனால், டொனால்ட் டிரம்ப் அவ்வாறு அல்ல; டிரம்பை பிறரால் புரிந்து கொள்ளவோ அல்லது அவரது நடவடிக்கைகளை யூகிக்கவோ முடியாது.
இருப்பினும், அமெரிக்காவில் யார் அதிபராக பதவி ஏற்றாலும் அவர்களுடன் ரஷியா இணைந்து பணியாற்ற முடியும்.
நேட்டோவில் அமெரிக்காவின் ஈடுபாடு குறித்து டிரம்ப் கொண்டிருக்கும் சிந்தனைகளில் நியாயம் உள்ளது. ஆனால், முடிவு செய்ய வேண்டியது அமெரிக்காவின் பொறுப்பு.
பைடனின் உடல்நலம் குறித்து கருத்து தெரிவிக்க நான் டாக்டர் அல்ல. அவரது உடலாரோக்கியம் குறித்து நான் பேசுவது முறையாக இருக்காது.
2021ல் சுவிட்சர்லாந்து நாட்டில் பைடனை நான் சந்தித்த போது அவர் நலமாகத்தான் இருந்தார்.
இவ்வாறு புதின் கூறினார்.