ரஷியாவின் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் உக்ரைன் அதிபர்
- போர் தொடங்கியதில் இருந்து உக்ரைனைச் சேர்ந்த பலர் மீது ரஷியா கைது வாரண்டு பிறப்பித்துள்ளது.
- இது பயனற்ற அறிவிப்பு என உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் விமர்சித்துள்ளது.
மாஸ்கோ:
நேட்டோ கூட்டணியில் இணைய முயன்றதற்காக உக்ரைன் மீது ரஷியா 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. 2 ஆண்டுகளைத் தாண்டியும் இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, பல ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் சப்ளை, பொருளாதார உதவிகளை செய்து வருகின்றன. அவற்றின் மூலம் உக்ரைன் இன்னும் போரில் தாக்குப்பிடித்து நிற்கிறது.
இதற்கிடையே போர் தொடங்கியதில் இருந்து உக்ரைனைச் சேர்ந்த பலர் மீது ரஷியா கைது வாரண்டு பிறப்பித்துள்ளது. மேலும் சர்வதேச நீதிமன்றத்தில் வக்கீலுக்கும் ரஷியா கைது வாரண்டு பிறப்பித்தது.
இந்தநிலையில் தற்போது உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, முன்னாள் அதிபர் பெட்ரோ பொரோஷென்கோ மற்றும் தரைப்படைத் தளபதி ஒலெக்சாண்டர் பாவ்லியுக் ஆகியோரை தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்துள்ளது.
மேலும் போரில் உக்ரைனுக்கு உதவியதற்காக எஸ்டோனிய பிரதமர் காஜா கல்லாசையும் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் ரஷியா சேர்த்துள்ளது. இதன்மூலம் இந்த பட்டியலில் உள்ளவர்கள் ரஷியாவில் நுழைந்தால் அவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள்.
ஆனால் இது பயனற்ற அறிவிப்பு என உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் விமர்சித்துள்ளது. மேலும் நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தின் கைது வாரண்டு மட்டுமே உண்மையானது மற்றும் 123 நாடுகளில் செயல்படுத்தக்கூடியது என்பதை நினைவூட்டுவதாகவும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறினார்.
சர்வதேச நீதிமன்றத்தால் ஏற்கனவே ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மீது கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.