உலகம்

கடற்கரை பாறையில் யோகா செய்த நடிகை அலையில் சிக்கி பலி

Published On 2024-12-04 02:23 GMT   |   Update On 2024-12-04 02:23 GMT
  • 15 நிமிடத்துக்கு பிறகு மீட்பு குழுவினர் அங்கு வந்தனர்.
  • கடல் சீற்றம் அதிகம் இருந்ததால் தேடுவதை நிறுத்தி விட்டனர்.

கடல் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஆனால் ஆபத்து நிறைந்தது. பலரும் அதை உணருவதில்லை.

சமீபத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, மாமல்லபுரம் உள்ளிட்ட கடல் பகுதிகள் சீற்றமாக இருந்தது. யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தியும் பலர் அதை கண்டுகொள்ளாமல் கடற்கரைக்கு குடும்பத்துடன் சென்று விளையாடியதை பார்த்தோம். சீற்றம் அதிகமுள்ள நேரத்தில் மட்டுமல்ல, சாதாரண நாட்களிலும் முன்னெச்சரிக்கை இன்றி கடற்கரை பகுதிக்கு செல்வது ஆபத்துதான்.

இதை உணராமல், கடற்கரை பகுதிக்கு சென்ற நடிகை ஒருவர் அலையில் சிக்கி பலியாகியுள்ளார். அந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

ரஷிய நாட்டின் பிரபல நடிகை கெமில்லா பெல்யாஸ்டாக்யா. 24 வயதான அவர் தனது காதலனுடன், தாய்லாந்தில் உள்ள சுற்றுலா தலமான கோசியா மியூய் தீவிற்கு சென்றார்.

யோகா ஆர்வலரான கெமில்லா, கடற்கரையில் உள்ள ஒரு பாறையில் அமர்ந்து கண்களை மூடியபடி யோகா செய்தார். அப்போது கடல் அலைகள் சீற்றமாக இருந்தது. திடீரென்று ஒரு பெரிய அலை கரைக்கு வந்து யோகா செய்து கொண்டு இருந்த நடிகை கெமில்லாவை கடலுக்குள் இழுத்துச் சென்றது. அலைல் சிக்கிய அவர், கடலுக்குள் உயிருக்கு போராடினார்.

நீண்ட நேரம் கடலில் தத்தளித்து கொண்டு இருந்த அவரை மீட்க யாரும் இல்லாததால், கடலில் மூழ்கினார்.

15 நிமிடத்துக்கு பிறகு மீட்பு குழுவினர் அங்கு வந்தனர். கடல் சீற்றம் அதிகம் இருந்ததால் தேடுவதை நிறுத்தி விட்டனர். சில நிமிடங்களுக்கு பிறகு, வேறு பகுதியில் கெமில்லாவின் உடல் கரை ஒதுங்கியது.

நடிகை கெமில்லா பாறையில் அமர்ந்து யோகா செய்வதும், அவரை கடல் அலை இழுத்து செல்வதும், கடலில் அவர் தத்தளிப்பதும் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இந்த காட்சிகள் தற்போது சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.



Tags:    

Similar News