உலகம்

நிறுவனங்களின் ரகசியங்களை குறி வைக்கும் ரஷிய ஹேக்கர்கள்

Published On 2024-01-20 07:14 GMT   |   Update On 2024-01-20 07:14 GMT
  • மிட்நைட் ப்ளிசார்ட் எனும் ஹேக்கர் குழு ரஷிய ஆதரவுடன் செயல்படுகிறது
  • 2023 நவம்பரிலும் இக்குழு தாக்குதல் நடத்த முயன்றதாக மைக்ரோசாப்ட் தெரிவித்தது

கணினிகளை பயன்படுத்த முக்கியமாக தேவைப்படுவது "இயக்க முறைமை" எனும் ஆபரேட்டிங் சிஸ்டம் (Operating System).

உலக அளவில் கம்ப்யூட்டர்களில் பரவலாக பயன்படுத்தப்படும் ஆபரேட்டிங் சிஸ்டம், விண்டோஸ்.

இதை தயாரிப்பது அமெரிக்காவின் வாஷிங்டன் மாநில ரெட்மண்ட் (Redmond) பகுதியில் உள்ள மைக்ரோசாப்ட்.

நேற்று, தனது நிறுவன பாதுகாப்பு கட்டமைப்பு குறித்து மைக்ரோசாப்ட் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் அந்நிறுவனம் தெரிவித்திருப்பதாவது:

சைபர் தாக்குதல்கள் குறித்து நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

கடந்த 12 அன்று ரஷிய ஆதரவுடன் செயல்படும் மிட்நைட் ப்ளிசார்ட் (Midnight Blizzard) எனும் "ஹேக்கர்" (hacker) குழு, மைக்ரோசாப்டின் கார்ப்பரேட் மென்பொருள் கட்டுமானத்திற்கு உள்ளே அத்துமீறி ஹேக் செய்தது. பல ஈ-மெயில்களையும், பணியாளர்களின் கணக்கிலிருந்து சில கோப்புகளையும் திருடியது.

மூத்த அதிகாரிகள், சட்டத்துறை மற்றும் சைபர் பாதுகாப்பு துறையில் பணிபுரியும் ஊழியர்கள் உள்ளிட்ட பலரின் ஈ-மெயில்கள் திருடப்பட்டுள்ளன.

அக்குழுவினரின் செயல்கள் குறித்து எங்கள் நிறுவனம் அறிந்துள்ள ரகசிய தகவல்கள் என்னென்ன என வேவு பார்க்க இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

கடந்த 2023 நவம்பரில் "பாஸ்வேர்ட் ஸ்பிரே தாக்குதல்" எனும் முறையில் இதே குழு, பல முக்கிய அதிகாரிகளின் மின்னஞ்சல்களை ஊடுருவ முயன்றது.

அரசாங்க துணையுடன் செயல்படும் குழுக்களால் இது போன்ற தாக்குதல்கள் தொடர்கிறது.

இவ்வாறு மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

சில தினங்களுக்கு முன், நிறுவனங்களின் மென்பொருள் கட்டமைப்பில் சைபர் தாக்குதல்கள் நடைபெற்றால் அது குறித்தும், அதன் தாக்கம் குறித்தும் நிறுவனங்கள் அனைத்து தகவல்களையும் வெளியிட வேண்டும் என அமெரிக்காவில் புது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

Tags:    

Similar News