உலகம்

அடுத்த மெகா கட்டுமான திட்டத்தை அறிவித்தது சவுதி அரேபியா

Published On 2023-02-20 14:23 GMT   |   Update On 2023-02-20 14:23 GMT
  • முகாப் கட்டடமானது, 400 மீட்டர் உயரம், நீளம், அலகம் கொண்ட கனசதுர வடிவ கட்டுமானமாக அமைய உள்ளது.
  • இந்த பிரமாண்ட நகர திட்டம் தொடர்பான வீடியோவை சவுதி அரசு வெளியிட்டுள்ளது.

ரியாத்:

வானளாவிய கட்டுமான திட்டங்களை செயல்படுத்தி உலக நாடுகளை வியக்க வைக்கும் சவுதி அரேபிய அரசு, அடுத்த பிரமாண்டமான ஒரு கட்டுமான திட்டத்தை அறிவித்துள்ளது. சவூதி அரேபிய தலைநகர் ரியாத்தில் புதிய முராபா என்ற பெயரில் உலகின் மிகப்பெரிய நகர்ப்பகுதியை உருவாக்கி வருவதாகவும், நகரின் மையமாக, முகாப் என்று அழைக்கப்படும் பிரமாண்ட கட்டிடம் இடம்பெற உள்ளதாகவும், அரபு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த பிரமாண்ட நகர திட்டம் தொடர்பான வீடியோவை சவுதி அரசு வெளியிட்டுள்ளது. இது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

முகாப் திட்டமானது, 400 மீட்டர் உயரம், 400 மீட்டர் நீளம், 400 மீட்டர் அகலம் கொண்ட கனசதுர வடிவ கட்டுமானமாக அமைய உள்ளது. இந்த திட்டத்தில் அருங்காட்சியகம், தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகம், தியேட்டர் மற்றும் 80-க்கும் மேற்பட்ட பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார மையங்கள் ஆகியவை இடம்பெறும் என வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய முராபா நகரம், 2.5 கோடி சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாக இருக்கும். 104,000 குடியிருப்புகள், 9,000 ஹோட்டல் அறைகள், 14 லட்சம் சதுர மீட்டர் அலுவலக இடம், 6.2 லட்சம் சதுர மீட்டர் ஓய்வு மையங்களுக்கான பகுதி மற்றும் 18 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவுக்கு சமுதாய வசதிகள் இருக்கும்.

இந்த பகுதிக்கான பிரத்யேக போக்குவரத்து அமைப்பு உருவாக்கப்படுகிறது. இதன்மூலம் விமான நிலையத்திலிருந்து 20 நிமிடத்தில் இந்த நகரை அடையலாம். புதிய நகரின் கட்டுமான பணிகள் 2030ல் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News