வேலை நேரம் முடிந்தும் பணியாளர்களை தொடர்பு கொண்டால்…: செனட் அதிரடி
- பணி நேரம் முடிந்ததும் ஊழியர்கள் செல்போனை அணைத்து வைக்கலாம்
- மின்னஞ்சலை பார்க்கும்படி இனி ஊழியர்களை நிறுவனங்கள் கட்டாயப்படுத்த முடியாது
ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் செனட் (Senate) மற்றும் பிரதிநிதிகளின் சபை (House of Representatives) என இரு அவைகள் உள்ளன.
செனட் சபை, அந்நாட்டு ஊழியர்களின் நலன் கருதி "ரைட் டு டிஸ்கனெக்ட்" (Right to Disconnect) எனும் "தொடர்பு அறுக்கும் உரிமை" குறித்து சட்டம் இயற்றியது.
இச்சட்டத்தின்படி, ஊழியர்களை பணியமர்த்தும் நிறுவனங்கள், தங்கள் பணி நேரத்தை முடித்த ஊழியர்களை, நிறுவன அதிகாரிகள் செய்தி, மின்னஞ்சல் மற்றும் செல்போன் அல்லது வேறு எந்த வகையிலும் தொடர்பு கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.
அதே போன்று, பணிக்கான நேரம் முடிந்ததும் ஊழியர்கள் தங்கள் செல்போன்களை அணைத்து வைத்து கொள்வதும் அவர்களின் உரிமை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் அந்தோனி அல்பானீஸ் (Anthony Albanese) இந்த சட்டத்திற்கு பெரும் ஆதரவு வழங்கியுள்ளார்.
இச்சட்டம் குறித்து கருத்து தெரிவித்த அந்தோனி அல்பானீஸ், "24 மணி நேர பணிக்காக ஊதியம் வாங்காத ஒருவர் பணி நேரம் முடிந்தும் தொடர்பில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை" என கூறினார்.
மென்பொருள், தகவல் தொடர்பு உள்ளிட்ட பல துறைகளில் பணிக்கான நேரம் முடிந்து ஊழியர்கள் சென்ற பிறகும், தங்கள் மின்னஞ்சலை அவ்வப்போது பார்த்து அலுவல் குறித்த முடிவுகளை எடுக்க கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
தாங்கள் தேவையற்று அழைக்கப்படுவதாக பணியாளர்கள் உணர்ந்தால் நிறுவன மேலிடத்தில் தெரிவிக்க வேண்டும். அதில் தீர்வு காணப்படவில்லை என்றால், பணியாளர் நல ஆணையத்திடம் முறையிடலாம்.
இச்சட்டத்திற்கு புறம்பாக ஊழியர்களை அழைக்கும் நிறுவனங்களுக்கு இனி அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.