உலகம்

பகவத் கீதை மீது பிரமாணம் செய்து பதவியேற்பு: செனட்டர் செய்த புதுமை

Published On 2024-02-07 08:34 GMT   |   Update On 2024-02-07 08:34 GMT
  • இந்துக்களின் புனித "ஸ்ரீபகவத் கீதை" நூலின் மீது பிரமாணம் செய்து கொண்டார்
  • வருண் கோஷின் பெற்றோர், நரம்பியல் துறையில் மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

ஆஸ்திரேலிய பாராளுமன்றம், செனட், பிரதிநிதிகள் சபை என இரு சபைகளும், "அரசர்" எனும் அந்தஸ்தில் கவர்னர்-ஜெனரல் ஒருவரையும் கொண்டது.

செனட் பதவிக்கு, மேற்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த பாரிஸ்டர் பட்டம் படித்த, இந்திய வம்சாவளியினரான வருண் கோஷ் (Varun Gosh) என்பவரை பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்தனர்.

இந்நிலையில், தனது பதவியேற்பு நிகழ்ச்சியில் இந்துக்களின் புனித "ஸ்ரீபகவத் கீதை" (Sri Bhagavad Gita) மீது பிரமாணம் செய்து பதவியேற்று கொண்டார்.

ஆஸ்திரேலிய வரலாற்றிலேயே இவ்வாறு நடைபெறுவது இதுவே முதல்முறை.

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் (Anthony Albanese), வருண் கோஷ் பதவியேற்றது குறித்து எக்ஸ் கணக்கில் மகிழ்ச்சியுடன் தனது பாராட்டுகளை தெரிவித்து அவரை வரவேற்றுள்ளார்.

1985ல் ஆஸ்திரேலிய தலைநகர் கேன்பெர்ரா (Canberra) நகரில் பிறந்தவர் வருண் கோஷ்.

மேற்கு வங்கத்தை பூர்வீகமாக கொண்ட இவரது பெற்றோர், நரம்பியல் துறை மருத்துவர்கள். வருண், கலை மற்றும் சட்டப்படிப்பில் மேற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். அத்துடன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் சட்டம் பயின்றவர்.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில், உலக வங்கியில் (World Bank) ஆலோசகராகவும் பணி புரிந்தார்; நியூயார்க் நகரில் நிதித்துறை சட்ட ஆலோசகராகவும் பணியாற்றினார்.

தனது 17-வது வயதில் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் லேபர் கட்சியில் சேர்ந்தது முதல் இவரது அரசியல் வாழ்க்கை தொடங்கியது.

தனது பதவி குறித்து பேசும் போது, "மிக உயர்ந்த கல்வி கற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. உயர்தர கல்வியும், பயிற்சியும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்" என வருண் கோஷ் தெரிவித்தார்.

Tags:    

Similar News