பின்லேடனின் நெருங்கிய உதவியாளரும், அல்கொய்தா மூத்த தலைவருமான அமின் உல் ஹக் கைது
- 1996-ல் இருந்து மறைந்த பின்லேடனின் நெருங்கிய உதவியாளராக இருந்துள்ளார்.
- பாகிஸ்தானில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானின் பயங்கரவாத தடுப்பு துறையின் அதிகாரிகள், அல்-கொய்தா நிறுவன தலைவரான பின்லேடனின் நெருங்கிய உதவியாளரும், அந்த இயக்கத்தின் மூத்த தலைவருமான அமின் உல் ஹக் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளனர்.
புலனாய்வு அடிப்படையிலான தேடுதல் வேட்டையில் பயங்கரவாதியான அமின் உல் ஹக் கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டிருந்தது முறியடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவால் உலகளாவிய பயங்கரவாதி என அறிவிக்கப்பட்ட அமின் உல் ஹக்கை, பஞ்சாப் மாகாணம் குஜராத் மாவட்டத்தில் உள்ள சராய் அலாம்கிர் நகரில் இருந்து காவலில் எடுத்துள்ளோம் என பயங்கரவாத தடுப்பு துறையின் டிஐஜி உஸ்மான் அக்ரம் கொனதல் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் போலீசின் பயங்கரவாத தடுப்பு துறையின் செய்தி தொடர்பாளர் "அமின் உல் ஹக் கைது பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையின் முக்கியமான திருப்புமுனை" எனத் தெரிவித்துள்ளார்.
முக்கியமான கட்டமைப்புகள் மற்றும் பிரபலங்களை குறிவைத்து பஞ்சாப் மாகாணத்தில் சதி செயல்களில் ஈடுபட திட்டமிட்டது தெரியவந்துள்ளது. இவர் 1996-ல் இருந்து பின்லேடனின் நெருங்கிய உதவியாளராக இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் ரகசியமான இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொள்ள இருக்கின்றனர்.
கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள அப்போதாபாத்தில் அமெரிக்கா நடத்திய வேட்டையில் மறைந்து இருந்த பின்லேடன் கடந்த 2011-ம் ஆண்டு சுட்டு வீழ்த்தப்பட்டார்.
அமின் உல் ஹக் 2021-ல் ஆப்கானிஸ்தானில் காணப்பட்டதாகவும் அவரிடம் பாகிஸ்தான் ஐடி கார்டு இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.