வெட்டப்பட்ட பன்றித் தலை.. உடல் துண்டிக்கப்பட்ட எலிகள்.. அதிபரை விமர்சித்த பிரபல பத்திரிகைக்கு மிரட்டல்
- பத்திரிகையாளராக இருப்பது "மரண தண்டனைக்கு சமம்" என்று அம்னஸ்டி இன்டர்நேஷனல் விமரிசித்துள்ளது.
- பயமுறுத்துவதே நோக்கம் என்றால், நாங்கள் பயப்படப் போவதில்லை, ஆனால் இந்த கோழைத்தனமான செயலை நிறுத்த வேண்டும்
இந்தோனேசியா அதிபர் பிரபோவோ சுபியாண்டோவின் கொள்கைகளை விமர்சித்த டெம்போ என்ற பத்திரிகைக்கு கொடூரமான முறையில் அச்சுறுத்தல் விருட்க்கப்பட்டுள்ளது.
ஒரு பன்றியின் தலையும், வெட்டபட்ட எலிகளின் உடல்கள் அடங்கிய பெட்டியும் டெம்போ பத்திரிகையின் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
1970 களில் இருந்து இந்தோனேசியாவின் சிறந்த வாராந்திர வெளியீடுகளில் ஒன்று டெம்போ. சமீபத்தில் அதிபர் பிரபோவோவின் கொள்கைகள் குறித்த விமர்சன அறிக்கைகளை வெளியிட்டது.
இந்நிலையில் நேற்று (சனிக்கிழமை) (மார்ச் 22), டெம்போவின் அலுவலகத்தில் துண்டாக்கப்பட்ட எலிகளின் உடல்கள் அடங்கிய பெட்டியை துப்புரவுப் பணியாளர்கள் கண்டுபிடித்தனர். அதே நேரத்தில் கடந்த வியாழக்கிழமை ஒரு பன்றியின் தலையும் அங்கு அனுப்பப்பட்டது.
இந்த அச்சுறுத்தலுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் இது பத்திரிகை சுதந்திரத்திற்கு ஒரு தீவிரமான கவலையாக மாறியுள்ளது.
இந்தோனேசியாவில் பத்திரிகையாளராக இருப்பது "மரண தண்டனைக்கு சமம்" என்று ஆய்வு அமைப்பான அம்னஸ்டி இன்டர்நேஷனல் - இன் இந்தோனேசியாவின் நிர்வாக இயக்குனர் உஸ்மான் ஹமீத் விமர்சித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் கோரியுள்ளார். சர்வதேச பத்திரிகையாளர் குழுவும் இந்த சம்பவத்தில் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
"பயமுறுத்துவதே நோக்கம் என்றால், நாங்கள் பயப்படப் போவதில்லை, ஆனால் இந்த கோழைத்தனமான செயலை நிறுத்த வேண்டும்" என்று டெம்போவின் இதழின் தலைமை ஆசிரியர் செட்ரி யசாரா தெரிவித்துள்ளார். அரசின் சமீபத்திய பட்ஜெட் வெட்டுகள் தொடர்பான விமர்சனங்களும், அதைத் தொடர்ந்து போராட்டங்களும் இந்தோனேசியாவில் அரசியல் பதற்றத்தை அதிகரித்துள்ளது.