300 பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதித்தது இலங்கை
- மக்களின் போராட்டம் புரட்சியாக உருவெடுத்த நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பிச் சென்றார்.
- ஆகஸ்ட் 23ம் தேதிக்கு முன் அனுப்பப்பட்ட பொருட்கள் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு:
இலங்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்நிய செலாவணியின் கடுமையான பற்றாக்குறையால், அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. உணவு, எரிப்பொருள் என அத்தியாவசியப் பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதால், மக்கள் கடும் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
இதன் எதிரொலியாக பொதுமக்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் புரட்சியாக உருவெடுத்த நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பிச் சென்றார். புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார்.
இந்நிலையில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சாக்லேட்டுகள், வாசனை திரவியங்கள், தொலைபேசிகள், பிரஷர் குக்கர்கள் மற்றும் ஷாம்புகள் உள்ளிட்ட 300 பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யக்கூடாது என இலங்கை அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. எனினும், இந்த பொருட்கள் ஆகஸ்ட் 23ம் தேதிக்கு முன் அனுப்பப்பட்டு செப்டம்பர் 14-ம் தேதிக்குள் நாட்டிற்கு வந்தாலும் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.