உணவு தட்டுப்பாடு அபாயம் எதிரொலி- இலங்கைக்கு செல்கிறார் ஐ.நா. உணவு திட்ட அதிகாரி
- இலங்கையில் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
- ஐ.நா. உலக உணவு திட்டத்தின் செயல் இயக்குனர் டேவிட் பீஸ்லேவுடன் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
கொழும்பு:
இலங்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உரங்களுக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே தடை விதித்தார். இதைத் தொடர்ந்து அங்கு உணவு தானிய உற்பத்தி குறைந்துள்ளது. டாலர் தட்டுப்பாட்டால் உணவுப்பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலையும் உள்ளது. இதனால் இலங்கையில் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்த நிலையில், ஐ.நா. உலக உணவு திட்டத்தின் செயல் இயக்குனர் டேவிட் பீஸ்லேவுடன் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இலங்கை நிலைமையை நேரில் கண்டறிய வருமாறு அவருக்கு ரணில் விக்ரமசிங்கே அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை அவரும் ஏற்று, இலங்கை வர முன்வந்துள்ளார். இதை ரணில் விக்ரமசிங்கே டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு உயிர் காக்கும் உதவிகள் வழங்குவதற்கு 47.2 மில்லியன் டாலர் (ரூ.354 கோடி) நிதி வேண்டும் என்று கூறி நன்கொடைகளை ஐ.நா. சபை கோரி இருப்பது குறிப்பிடத்தக்கது.