உலகம்

(கோப்பு படம்)

சோமாலியாவில் இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதல்- சுகாதாரத்துறை அமைச்சர் உள்பட 9 பேர் உயிரிழப்பு

Published On 2022-10-03 16:15 GMT   |   Update On 2022-10-03 16:15 GMT
  • அரசு தலைமை அலுவலகத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.
  • கொடூர தாக்குதலுக்கு அல்ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

ஹிரன்:

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் செயல்பட்டு வரும் அல்ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு அரசை கவிழ்க்க முயற்சித்து வருகிறது. அல்கொய்தாவுடன் தொடர்புடைய இந்த பயங்கரவாத அமைப்பு, சோமாலியா மக்கள் மற்றும் ராணுவத்தை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஹிரன் மாகாணத்தில் உள்ள பெலேட்வேய்ன் நகரில் உள்ள அரசு தலைமை அலுவலகத்தில் இன்று அடுத்தடுத்து இரண்டு கார் வெடிகுண்டுகள் வெடித்தன. இந்த இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலில் அந்த மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் ஹிர்ஷபெல்லே, சுகாதார ஆணையர் மற்றும் அதிகாரிகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த கொடூர தாக்குதலுக்க அல்ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் தற்கொலை படை போல் செயல்பட்டு இந்த தாக்குதலை நிகழ்த்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அல்ஷபா அமைப்பின் முக்கிய தலைவன் அப்துல்லாவை கடந்த சனிக்கிழமை சோமாலிய பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்ற நிலையில் அதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News