உலகம்
இலங்கையில் இன்று முதல் மீண்டும் அவசர நிலை அமல்
- இலங்கையில் அதிபர் பதவிக்கு நாளை மறுநாள் தேர்தல் நடத்தப்படுகிறது
- அதிபர் தேர்தலையொட்டி வன்முறை பரவாமல் இருக்க நடவடிக்கை
கொழும்பு:
இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான மக்கள் புரட்சி தீவிரமடைந்ததையடுத்து அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். பின்னர் அவர் பதவி விலகினார். அவர் ராஜினாமா செய்ததையடுத்து, காலியாக இருக்கும் அதிபர் பதவிக்கு நாளை மறுநாள் (ஜூலை 20) தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தலையொட்டி வன்முறை பரவாமல் இருக்கவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையிலும் இன்று முதல் மீண்டும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை இடைக்கால அதிபர் ரணில் விக்கிரமசிங்கே பிறப்பித்தார்.
இதன்மூலம் பாதுகாப்புப் படையினருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் சோதனை நடத்தி ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை கைப்பற்றுதல், கைது செய்தல் போன்ற அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.