சூடானில் ஆயுதப்படைகள் மோதல் 3-வது நாளாக நீடிப்பு: பொதுமக்கள் உயிரிழப்பு 97 ஆக உயர்வு
- ராணுவம் மற்றும் துணை ராணுவ தலைவர்கள் இடையிலான அதிகாரப் போட்டியின் ஒரு பகுதியாக மோதல் ஏற்பட்டுள்ளது.
- ராணுவ ஆட்சியை கைவிட்டு ஜனநாயக பாதைக்கு திரும்புவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
சூடான் நாட்டில் 2021-ம் ஆண்டு அக்டோபரில் ஏற்பட்ட ராணுவப் புரட்சிக்குப் பின்னர் ராணுவ தலைவர்களே ஆட்சி நடத்தி வந்தனர். இந்நிலையில், ராணுவம் - துணை ராணுவம் இடையே பெரும் மோதல் வெடித்துள்ளது. ராணுவ தளபதியான ஜெனரல் அப்தெல் ஃபத்தா புர்ஹான் மற்றும் துணை ராணுவ படையான விரைவு ஆதரவுப் படையின் தலைவர் ஜெனரல் முகமது ஹம்தான் டகலோ ஆகியோருக்கு இடையிலான அதிகாரப் போட்டியின் ஒரு பகுதியாக இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
தலைநகர் கர்த்தூமில் அதிபர் மாளிகை, அரசு தொலைக்காட்சி மற்றும் ராணுவ தலைமையகத்தை பிடிக்க இரு தரப்பும் கடுமையாக சண்டையிடுகின்றன. பிற பகுதிகளிலும் மோதல் தீவிரமடைந்து வருகிறது. இரு தரப்பினரும் துப்பாக்கி சண்டை, குண்டு வீச்சில் ஈடுபட்டு வருவதால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது தொடர்கிறது.
சூடான் முழுவதும் ஆங்காங்கே மூன்றாவது நாளாக சண்டை நீடிக்கும் நிலையில், பொதுமக்கள் தரப்பில் உயிரிழப்பு 97 ஆக உயர்ந்துள்ளது. மத்திய கர்த்தூமில் உள்ள விதிகளில் இன்னும் ஏராளமான உடல்கள் மீட்கப்படாமல் இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம். அதேசமயம் சண்டையில் ஈடுபடும் படைவீரர்கள் தரப்பில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை.
ராணுவ ஆட்சியை கைவிட்டு ஜனநாயக பாதைக்கு திரும்புவதற்கான பேச்சுவார்த்தைகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகின்றன. சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுத்தததன் அடிப்படையில், புர்ஹானும் டகலோவும் அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநாயக ஆதரவு அமைப்புகளுடன் ஒப்பந்தம் செய்வதற்கு முன்வந்தனர். எனினும், துணை ராணுவம் எப்படி ஆயுதப் படைகளில் ஒருங்கிணைக்கப்படும்? ஒருங்கிணைத்தபின், மொத்த படைகளின் கட்டுப்பாடு யாரிடம் இருக்கும்? என்பது உட்பட முக்கிய விவகாரங்கள் குறித்து ஒப்பந்தத்தில் தெளிவாக இல்லை. இதன் காரணமாகவும், இரண்டு தளபதிகளிடையே பிரச்சனை அதிகரித்ததாலும் ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டது.