அமெரிக்காவில் மர்மநபர் கத்திக்குத்து தாக்குதலில் 4 பேர் பலி
- ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- சம்பவம் குறித்து ராக்போர்ட் நகர மேயர் டாம் மெக்ன மாரா கூறும் போது, அப்பாவி மக்களுக்கு எதிரான மற்றொரு கொடூரமான வன்முறை செயலால் நாங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளோம் என்றார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் இல்லி னாய்ஸ் மாகாணம் ராக்போர்ட் பகுதியில் மர்மநபர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டார். அவர் அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்களை கத்தியால் குத்தினார்.
இதனால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
கத்திக்குத்து தாக்குதலில் காயம் அடைந்தவர்களை மீட்டனர். அப்போது மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கிடந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த 8 பேரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பலியானவர்கள், 15 வயது சிறுமி, ஒரு பெண், இரண்டு ஆண்கள் என்று போலீசார் தெரிவித்தனர். அவர்களது பெயர் விவரங்களை வெளியிடவில்லை.
இதற்கிடையே கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்ட நபரை போலீசார் பிடித்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் குறித்து ராக்போர்ட் நகர மேயர் டாம் மெக்ன மாரா கூறும் போது, அப்பாவி மக்களுக்கு எதிரான மற்றொரு கொடூரமான வன்முறை செயலால் நாங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளோம் என்றார்.