இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு
- சுமத்ரா தீவில் இன்று அதிகாலை கடலுக்கு அடியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
- நிலநடுக்கத்தால் வீடுகள், ஆஸ்பத்திரி கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் கெப்புலவுன் படு நகரில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் உண்டானது.
இந்த நிலையில் இந்தோனோசியாவில் இன்று மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் மேற்கு சுமத்ரா தீவில் இன்று அதிகாலை கடலுக்கு அடியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவானது.
இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதனால் பீதியடைந்த மக்கள், வீடுகளில் இருந்து வெளியேறி உயரமான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.
மேற்கு சுமத்ரா, வடக்கு சுமத்ரா, மென்டலாய் தீவு உள்ளிட்ட இடங்களில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சுமார் இரண்டு மணி நேரத்துக்கு பிறகு சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், ஆஸ்பத்திரி கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. முழுமையான சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை. அதிகாலையில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் இந்தோனேசியாவில் பெரும் பரபரப்பு நிலவியது.