இந்தியாவில் ரெயில் பயணத்தின் போது அமெரிக்க பெண் தொலைத்த பணப்பையை மீட்டு கொடுத்த குஜராத் வாலிபர்
- சிராக்கை சந்தித்த அந்த பெண்ணிடம் அவர் பணப்பையை ஒப்படைத்தார்.
- ஒரு பயனர் சிராக் போன்றவர்கள் இந்தியா சுற்றுலாவில் உண்மையான தூதர்கள் என கருத்து தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் இம்மாத தொடக்கத்தில் தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் தான் இந்தியாவில் ரெயிலில் ஏறிய போது தனது பணப்பையை மறந்து விட்டு ரெயில் நிலையத்தில் இறங்கியதாக கூறி இருந்தார்.
ஆனால் சிறிது நேரத்திலேயே தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் சிராக் என்ற நபரிடம் இருந்து ஒரு தகவல் வந்ததாகவும், அதில் சிராக் தனது பணப்பையை கண்டுபிடித்ததாகவும், அதை திருப்பி தருவதாகவும் கூறப்பட்டு இருந்தது.
இதைத்தொடர்ந்து சிராக்கின் பதிவுகளின்படி அவர் குஜராத்தின் புஜ் நகர பகுதியில் ஒரு ஓட்டலுக்கு சென்றார். அங்கு சிராக்கை சந்தித்த அந்த பெண்ணிடம் அவர் பணப்பையை ஒப்படைத்தார்.
அதனை பெற்று கொண்ட அமெரிக்க பெண், சிராக்கிற்கு நன்றி தெரிவித்து பணம் வழங்கினார். ஆனால் அதனை ஏற்க மறுத்த சிராக் அமெரிக்க பெண்ணிடம் அவரது பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு கூறினார். இது தொடர்பாக அமெரிக்க பெண் பதிவிட்டு இருந்த பதிவில் சிராக்கின் உண்மையான கருணை சேவைக்கு நான் பணம் வழங்கியது எவ்வளவு பெரிய தவறு என்பதை நான் கற்றுக் கொண்டேன் என கூறியுள்ளார்.
அமெரிக்க பெண்ணின் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த வீடியோ சுமார் 50 ஆயிரம் விருப்பங்களை பெற்றுள்ளது. அதில் ஒரு பயனர் சிராக் போன்றவர்கள் இந்தியா சுற்றுலாவில் உண்மையான தூதர்கள் என கருத்து தெரிவித்துள்ளார்.