அரசியல்வாதிகளை தொடர்பு கொள்ளக் கூடாது- ராணுவ-ஐ.எஸ். அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் தளபதி அதிரடி உத்தரவு
- இடைத்தேர்தலை முன்னிட்டு எனது கட்சி தலைவர்கள், தொண்டர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்றார்.
- தேவையற்ற சர்ச்சைகளால் ராணுவம் மற்றும் உளவுத்துறை மீது விமர்சனங்கள் வருவதை தவிர்க்க நடவடிக்கை.
பாகிஸ்தானில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ராணுவ தளபதியாக உமர் ஜாவத் பஜ்வா உள்ளார்.
முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்ந்ததையடுத்து புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது அரசு கவிழ்ப்பில் வெளிநாட்டு சதி இருப்பதாகவும், ராணுவம் உடந்தையாக இருந்தது என்றும் இம்ரான்கான் குற்றம்சாட்டினார்.
இதற்கிடையே பஞ்சாப் மாகாணத்தில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சிக்கு எதிராக செயல்பட பாகிஸ்தான் ராணுவம் முயற்சித்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக இம்ரான்கான் கூறும்போது, "எனது வேட்பாளர்களுக்கு தெரியாத எண்களில் இருந்து தொலைபேசி அழைப்புகள் வருவதாக அவர்கள் என்னிடம் தெரிவித்தனர்.
இடைத்தேர்தலை முன்னிட்டு எனது கட்சி தலைவர்கள், தொண்டர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்றார்.
இந்த நிலையில் ராணுவம் மற்றும் உளவுத்துறையான ஐ.எஸ். அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜாவத் பஜ்வா அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், ராணுவ அதிகாரிகள், உளவுத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள், அரசியலில் இருந்து விலகி இருக்க வேண்டும். அரசியல்வாதிகளுடன் தொடர்பு கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.
தேவையற்ற சர்ச்சைகளால் ராணுவம் மற்றும் உளவுத்துறை மீது விமர்சனங்கள் வருவதை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.