பிரதமர் மோடியின் அருணாசலபிரதேச பயணத்துக்கு சீனா கடும் எதிர்ப்பு
- உலகின் நீளமான இரட்டை சுரங்கப்பாதையும் அடங்கும்.
- இரு நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பகுதிகளில் நிலைமையை சீர்குலைக்கும்.
பீஜிங்:
இந்தியாவின் அருணாசல பிரதேசத்தை தெற்கு திபெத் என்று சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதற்கிடையே பிரதமர் மோடி கடந்த 9-ந்தேதி அருணாசலபிரதேசத்துக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். இதில் உலகின் நீளமான இரட்டை சுரங்கப்பாதையும் அடங்கும். இந்த நிலையில் பிரதமர் மோடியின் அருணாசலபிரதேச பயணத்துக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வாங்வென் பின் கூறியதாவது:-
சாங்னான் பகுதி (அருணாசல பிரதேசத்தை குறிப்பிடுகிறது) சீனப் பகுதி. அதை இந்தியா, அருணாசலப்பிரதேசம் என்று அழைப்பதை சீன அரசு ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை, அதை உறுதியாக எதிர்க்கிறது. அப்பகுதியை தன்னிச்சையாக மேம்படுத்த இந்தியாவுக்கு உரிமை இல்லை.
இந்தியாவின் நடவடிக்கைகள் எல்லைப் பிரச்சினையை சிக்கலாக்கும். இரு நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பகுதிகளில் நிலைமையை சீர்குலைக்கும். சீனா-இந்திய எல்லையின் கிழக்குப் பகுதிக்கு மோடியின் வருகையை சீனா கடுமையாகக் கண்டிக்கிறது. அதை உறுதியாக எதிர்க்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.