உலகம்

என் பூட்சில் ரூ. 20 கோடி போதை பொருட்கள் உள்ளது- இங்கிலாந்து போலீசாரை திகைக்க வைத்த கடத்தல் காரன்

Published On 2023-01-20 09:43 GMT   |   Update On 2023-01-20 09:43 GMT
  • இங்கிலாந்தில் போதைபொருட்கள் கடத்தப்படுவதாக வந்த தகவலின் பேரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
  • காரில் வந்த ஒருவன் திடீரென கீழே இறங்கி வந்து போலீசாரிடம் தனது காரில் போதைப்பொருட்கள் உள்ளதாகவும், தான் அணிந்து உள்ள பூட்சில் கொகைன் மறைத்து வைத்து உள்ளதாகவும் தெரிவித்தான்.

பொதுவாக தாங்கள் செய்யும் தவறுகளை யாரும் ஒப்புக்கொள்வது இல்லை. ஆனால் கடத்தல்காரன் ஒருவன் தானாகவே முன்வந்து தான் போதைப்பொருட்கள் கடத்துவதாக கூறி போலீசாரை அதிர வைத்தான். இங்கிலாந்தில் போதைபொருட்கள் கடத்தப்படுவதாக வந்த தகவலின் பேரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் வந்த ஒருவன் திடீரென கீழே இறங்கி வந்து போலீசாரிடம் தனது காரில் போதைப்பொருட்கள் உள்ளதாகவும், தான் அணிந்து உள்ள பூட்சில் கொகைன் மறைத்து வைத்து உள்ளதாகவும் தெரிவித்தான்.

இதனால் போலீசார் ஒரு கணம் திகைத்தனர், அவனை சந்தேக கண்ணோடு மேலும் கீழும் பார்த்தனர். உடனே அவன் நான் உண்மையயை தான் சொல்கிறேன் சார். வேண்டுமென்றால் சோதனை செய்து கொள்ளுங்கள் என்று கூறினான். இதையடுத்து போலீசார் அவன் வந்த காரை சோதனை செய்தனர். அப்போது காரில் 2 பைகளில் கொகைன் போதை பொருட்கள் இருந்தது. அவன் காலில் போட்டு இருந்த பூட்சை பிரித்து பார்த்த போது அதிலும் போதைபொருட்கள் மறைத்து வைத்து இருந்ததை போலீசார் கண்டுபிடித்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே போலீசார் அவனை கைது செய்து 19 கிலோ எடைகொண்ட போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

அதன் சர்வதேச மதிப்பு ரூ. 20 கோடியாகும். விசாரணையில் கடத்தல்காரன் பெயர் கியாரன் கிரான்ட் என்பது தெரியவந்தது. போலீசார் அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அவனுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News